குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் விவசாய நிலத்துக்கு பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு


குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் விவசாய நிலத்துக்கு பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 20 March 2018 3:45 AM IST (Updated: 20 March 2018 1:06 AM IST)
t-max-icont-min-icon

குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில், விவசாய நிலத்துக்கு பட்டா கேட்டு கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். கூட்டத்தில், 9 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவு, 4 பேருக்கு தையல் எந்திரம் மற்றும் மது ஒழிப்பு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றிபெற்ற 33 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வலியுறுத்தி கலெக்டரிடம் மனுக்களை கொடுத்தனர். வருசநாடு அருகே உள்ள தும்மக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் சிலர் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

காமராஜபுரத்தில், சுமார் 70 ஆண்டுகளாக குடியிருந்து, விவசாயம் செய்து வருகிறோம். விவசாய நிலத்தில் இலவமரம், கொட்டை முந்திரி மரம், தென்னை மரம், முருங்கை, எலுமிச்சை, மா, பலா, கொய்யா போன்றவையும், அவரை, மொச்சை, துவரை, பீன்ஸ் போன்ற பயிர்களும் சாகுபடி செய்கிறோம். விவசாய நிலத்தை தவிர எங்களுக்கு வேறு நிலம் கிடையாது. எனவே, நாங்கள் விவசாயம் செய்யும் நிலத்துக்கு எங்களுக்கு தனிநபர் நிலப்பட்டா வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இதேபோல், கடமலை-மயிலை ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் மணவாளன் தலைமையில், கண்டமனூர் கிராம மக்கள் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘கண்டமனூர் கிராமத்தில் பல ஆண்டுகளாக வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு இருந்து வந்தது. இதனால் இங்குள்ள கண்மாயை பொதுமக்களே இணைந்து தூர்வாரி உள்ளனர். தற்போது கண்மாய் அருகில் தனிநபர்களான அண்ணன், தம்பி 2 பேர் சேர்ந்து, ஆழ்குழாய் கிணறு அமைத்து அங்கிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரம் வரை தண்ணீர் எடுத்து செல்ல குழாய் பதித்து வருகின்றனர். வியாபார நோக்கத்தில் தண்ணீரை எடுத்துச் செல்ல முயற்சிப்பதால், கண்மாய் தண்ணீர் இன்றி வறண்டு மீண்டும் வறட்சி ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, குழாய்களை அகற்றி குடிநீர் ஆதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தனர்.

சமத்துவ மக்கள் கழகத்தின் மாவட்ட செயலாளர் ஜெய்முருகேஷ், கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் நலனை கருத்தில் கொண்டு அங்கு போதிய அளவில் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும். தற்போது போதிய கழிப்பிடம் இல்லாததால் ஆற்றங்கரையை திறந்தவெளி கழிப்பறையாக பக்தர்கள் பயன்படுத்துகின்றனர். இதனால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது’ என்று கூறப்பட்டிருந்தது.

இதேபோல் தேனி அல்லிநகரம் அழகர்சாமி காலனியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ‘அழகர்சாமி காலனியில் அம்பேத்கர் தெரு, நடுத்தெரு, பாத்துமா தியேட்டர் தெரு ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு சுமார் 450 குடும்பங்கள் வசித்து வருகிறோம். இங்கு சுகாதார வசதி, தெருவிளக்கு, குடிநீர் வசதி, சாக்கடை கால்வாய் வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. குடியிருப்பு பகுதிகளில் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இப்பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

இந்த கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.


Next Story