நோயால் அவதிப்படும் சேலம் சுகவனேசுவரர் கோவில் யானைக்கு தீவிர சிகிச்சை விரைவில் குணமடையும் என டாக்டர்கள் நம்பிக்கை
நோயால் அவதிப்படும் சேலம் சுகவனேசுவரர் கோவில் யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் குணமடையும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
சேலம்,
சேலம் மாநகரில் பிரசித்திபெற்ற சுகவனேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான ராஜேஸ்வரி என்ற யானைக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து இயற்கையான சூழலில் வைத்து பராமரிப்பு செய்ய கோவில் நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி கோரிமேடு பகுதியில் கோவிலுக்கு சொந்தமான இடத்திற்கு யானையை கொண்டு சென்று பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது. யானைக்கு தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சை மற்றும் உணவுகள் கொடுத்து கவனித்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 2 வாரத்துக்கு முன்பு யானைக்கு வாதபிடிப்பு ஏற்பட்டதால் படுத்த படுக்கையாக இருந்தது. எழுந்து நிற்க முடியாமலும், சரிவர உணவு எடுத்துக்கொள்ளாமலும் அவதிப்பட்டு வந்தது. எனவே யானைக்கு தேவையான சிகிச்சை அளித்து குணப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் யானைக்கு தொடர் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 2 நாட்களாக யானையை கால்நடை டாக்டர்கள் குழு பரிசோதனை செய்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். சேலம் மண்டல தலைமை வனப்பாதுகாவலர் உலகநாதன் உத்தரவின்பேரில் சேலம் மண்டல கால்நடைத்துறை இணை இயக்குனர் டாக்டர் லோகநாதன், ஓசூர் வனத்துறை கால்நடை டாக்டர் பிரகாஷ், கோவை கோட்ட வனத்துறை கால்நடை டாக்டர் மனோகரன் ஆகியோர் நேற்று யானைக்கு சிகிச்சை அளிக்க வந்தனர்.
அப்போது யானைக்கு 30 பாட்டில் குளுக்கோஸ், கால்சியம் உள்ளிட்ட மருந்துகளை அளித்தனர். மேலும், தர்பூசணி பழங்களும் கொடுக்கப்பட்டது. அதை யானை ருசித்து சாப்பிட்டது. தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதால் இன்னும் ஓரிரு நாட்களில் யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும், விரைவில் குணமடையும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சேலம் மண்டல கால்நடைத்துறை இணை இயக்குனர் டாக்டர் லோகநாதன் கூறுகையில், நாமக்கல், ஓசூர், கோவை பகுதியில் இருந்து வனத்துறை கால்நடை டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதலில் எந்த ஒரு உணவும் உட்கொள்ளாமல் இருந்தது. தற்போது தர்பூசணி உள்ளிட்ட பழங்கள் சாப்பிடுகிறது. நோயால் அவதிப்படும் யானை விரைவில் குணமடையும் என்று எதிர்பார்க்கிறோம், என்றார்.
Related Tags :
Next Story