உளுந்து-பயறு அறுவடை பணி தீவிரம் மகசூல் குறைவால் விவசாயிகள் கவலை


உளுந்து-பயறு அறுவடை பணி தீவிரம் மகசூல் குறைவால் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 20 March 2018 4:00 AM IST (Updated: 20 March 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி பகுதியில் உளுந்து, பயறுகள் அறுவடை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் மகசூல் குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சீர்காழி,

நாகை மாவட்டம், சீர்காழி தாலுகாவில் அகணி, கொண்டல், நிம்மேலி, மருதங்குடி, வள்ளுவக்குடி, ஆதமங்கலம், பெருமங்கலம், திருப்பங்கூர், கன்னியாக்குடி, கதிராமங்கலம், எடக்குடிவடபாதி, காரைமேடு, சட்டநாதபுரம், திட்டை, தில்லைவிடங்கன், செம்மங்குடி, கடவாசல், எடமணல் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உளுந்து மற்றும் பயறுகள் சாகுபடி செய்து இருந்தனர். தற்போது உளுந்து, பயறுகளை அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதில் போதிய அளவு மகசூல் மற்றும் உளுந்து, பயறுகளுக்கு சரியான விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

விலை நிர்ணயம்

வழக்கம்போல இந்த ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து காலம் தாழ்த்தி பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டதாலும், அவ்வாறு திறந்து விடப்பட்ட காவிரிநீர் சீர்காழி பகுதிக்கு முழுமையாக வந்து சேராததாலும் சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதனால் உளுந்து மற்றும் பயறுகள் சாகுபடியில் கவனம் செலுத்தி வந்தோம். இந்த நிலையில் தற்போது உளுந்து, பயறுகளை அறுவடை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் போதிய அளவு மகசூல் கிடைக்கவில்லை. இதனால் அதற்கான கொள்முதல் விலையும் குறைவாக கிடைக்கிறது. எனவே சாகுபடி செய்த செலவு தொகை கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உளுந்து மற்றும் பயறு வகைகளுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் அவ்வாறு செய்தால் தான் உரிய விலை கிடைக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story