கடலூரில் குறைகேட்பு கூட்டம்: டாஸ்மாக் கடையை மூடக்கோரி வாயில் கருப்பு துணி கட்டி வந்த பெண்கள்
டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு, குறைகேட்பு கூட்டத்துக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்,
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தண்டபாணி தலைமையில் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பரங்கிப்பேட்டை வண்டிக்காரத்தெருவில் வசிக்கும் முஸ்லிம்கள் நகர காங்கிரஸ் தலைவர் செய்யது அலி தலைமையில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், பரங்கிப்பேட்டை வண்டிக்காரத்தெருவில் பெட்ரோல் பங்க் கட்ட அதிகாரிகள் அனுமதி வழங்கி உள்ளனர். ஆனால் பெட்ரோல் பங்க் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள இடம், குடியிருப்புக்கு மத்தியில் உள்ளது. எனவே அதன் அனுமதியை ரத்து செய்யக்கோரி முந்தைய கலெக்டரிடம் மனு கொடுத்தோம். கலெக்டர் உத்தரவின்பேரில் பெட்ரோல் பங்க் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் முந்தைய கலெக்டர் மாற்றம் செய்யப்பட்டு, புதிய கலெக்டர் பொறுப்பேற்ற உடன் பெட்ரோல் பங்க் அமைக்கும் பணியை தொடங்கி விட்டனர். எனவே மக்கள் நலன் கருதி பெட்ரோல் பங்க் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தவும், அதன் உரிமத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் ரேஷன் கார்டு, ஆதார் கார்டை ஒப்படைப்போம் என்று கூறி உள்ளனர்.
கடலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் சண்.முத்துகிருஷ்ணன் தலைமையில் திட்டக்குடி தாலுகா பனையந்தூர் கிராமம் பிற்பட்டோர் குடியிருப்பைச்சேர்ந்த பெண்கள் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், பனையந்தூர் பிற்பட்டோர் குடியிருப்பில் அரசு சார்பில் பொதுமக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் அரசால் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு உள்ளது. இதனை எதிர்த்து போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் பொய் வழக்கு போட்டு உள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. பொதுமக்கள் நலனுக்கு எதிராக குடியிருப்பு பகுதியில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட உத்தரவிட வேண்டும் என்று கூறி உள்ளனர்.
கிராம ஊராட்சிகளில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி இயக்குபவர்களுக்கு, கடந்த ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்தபடி உயர்த்தப்பட்ட ஊதியத்தை வழங்கக்கோரி ஊராட்சி குடிநீர்மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி இயக்குபவர்கள் சங்கத்தினர் தலைவர் ராமர் தலைமையில் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
விருத்தாசலம் தாலுகா புதுக்கூரைப்பேட்டை, குப்பநத்தம், அரசக்குழி, கோ.மாவிடந்தல், கொம்பாடிக்குப்பம், மணவாளநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள மாட்டு வண்டி தொழிலாளர்கள் மணல் குவாரி திறக்க வலியுறுத்தி முட்டிப்போட்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், விருத்தாசலம் மணிமுக்தாற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி அளிக்காததால் கடந்த மாதம் 26-ந்தேதி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாட்டு வண்டிகளை ஒப்படைக்க சென்றோம். அப்போது 15 நாட்களுக்குள் மணல் குவாரி திறக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை மணல் குவாரி அமைக்கப்படவில்லை, எனவே மணிமுக்தாற்றில் மாட்டு வண்டிகளுக்கு மணல் குவாரி அமைத்து தர உத்தரவிட வேண்டும் என்று கூறி உள்ளனர்.
இதேப்போல் கடலூர் மாவட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்க தலைவர் திருமுருகன் தலைமையில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், கடலூர் மாவட்டத்தில் அரசு அனுமதி அளிக்கும் மணல் குவாரிகளில் மணல் அள்ளி விற்று 5 ஆயிரம் மாட்டு வண்டி தொழிலாளர்கள் பிழைப்பு நடத்தி வருகிறார்கள். மாவட்டத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளின் அனுமதி 26-ந்தேதியுடன் காலாவதியாகிறது. எனவே மாட்டு வண்டி தொழிலாளர்கள் நலன் கருதி மணல்குவாரி திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர். இந்த மனுக்களை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story