ம.நடராஜன் உடல் சொந்த ஊரில் இன்று அடக்கம் மு.க.ஸ்டாலின், வைகோ, கி.வீரமணி உள்ளிட்டோர் அஞ்சலி


ம.நடராஜன் உடல் சொந்த ஊரில் இன்று அடக்கம் மு.க.ஸ்டாலின், வைகோ, கி.வீரமணி உள்ளிட்டோர் அஞ்சலி
x
தினத்தந்தி 21 March 2018 4:45 AM IST (Updated: 21 March 2018 12:34 AM IST)
t-max-icont-min-icon

மரணம் அடைந்த ம.நடராஜன் உடல் அடக்கம் அவருடைய சொந்த ஊரில் இன்று நடக்கிறது. அவருடைய உடலுக்கு மு.க.ஸ்டாலின், வைகோ, கி.வீரமணி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

தஞ்சை,

புதிய பார்வை ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான ம.நடராஜன் (வயது 75) கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அப்போது அவருடைய சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயல் இழந்ததால், சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் ஆஸ்பத்திரியில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. தஞ்சை மாவட்டத்தில் சாலைவிபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபர் ஒருவரின் சிறுநீரகம், கல்லீரல் ஆகியவை எம்.நடராஜனுக்கு பொருத்தப்பட்டது.

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவும் 5 நாட்கள் பரோலில் வந்து கணவர் ம.நடராஜனின் உடல்நலம் குறித்து விசாரித்து சென்றார்.

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பின்னர் ம.நடராஜன் உடல்நலம் தேறினார். வீட்டில் இருந்தபடியே ஓய்வு எடுத்தார். அவ்வப்போது குளோபல் ஆஸ்பத்திரிக்கு சென்று உடல் பரிசோதனையும் மேற்கொண்டு வந்தார். வரி ஏய்ப்பு வழக்கில் நீதிமன்றத்திலும் ஆஜராகினார். இந்தநிலையில் ம.நடராஜனுக்கு கடந்த 16-ந்தேதி மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அவர் குளோபல் ஆஸ்பத்திரியில் மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவர் நுரையீரல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் அவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. அவருடைய உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக குளோபல் ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவித்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 1.30 மணியளவில் ம.நடராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து குளோபல் ஆஸ்பத்திரி தலைமை செயல் அதிகாரி சண்முகபிரியன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ம.நடராஜனை காப்பாற்றுவதற்கு நாங்கள் அனைத்துவித முயற்சிகளும் மேற்கொண்டோம். எனினும் அவர் உடல்நலம் பெற இயலாத நிலையில் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டது.

ம.நடராஜன் உடல் போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டு பதப்படுத்தப்பட்டது. அதன்பின்னர் ஆம்புலன்சு மூலம் பெசன்ட் நகர் பாரி தெருவில் உள்ள அவருடைய இல்லத்துக்கு எடுத்து வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அப்போது ம.நடராஜன் உடல் அருகே அவருடைய சகோதரர்கள் சாமிநாதன், ராமச்சந்திரன், பழனிவேலு மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் சோகத்துடன் நின்றிருந்தனர். ஜெயா டி.வி.யின் தலைமை செயல் அதிகாரி விவேக், அவருடைய சகோதரிகள் கிருஷ்ணபிரியா, ஷகீலா, டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ., டாக்டர் சிவக்குமார் உள்பட அவருடைய குடும்பத்தினர் ம.நடராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ம.நடராஜன் உடலுக்கு தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய மந்திரிகள் ஜெகத்ரட்சகன், டி.ஆர். பாலு, முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, எம்.எல்.ஏ.க்கள் மா.சுப்பிரமணியன், வாகை சந்திரசேகர், வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், காங்கிரஸ் கட்சி சார்பில் புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி, தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே ஆர்.தியாகராஜன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அதன் மூத்த தலைவர்கள் ஆர்.நல்லக்கண்ணு, தா.பாண்டியன், மாநில செயலாளர் ரா.முத்தரசன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், மூத்த தலைவர் ஞானதேசிகன், மாவட்ட தலைவர் கொட்டிவாக்கம் முருகன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி,

சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். எம்.எல்.ஏ.க்கள் தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி, ஆர்.நட்ராஜ் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். மக்கள் நீதி மய்யத்தின் உயர்நிலைக்குழு உறுப்பினர் சினேகன், தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத், தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் தலைவர் எம்.எம்.ஆர்.மதன்,

அப்துல் கலாம் லட்சிய இந்தியா கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பொன்ராஜ், முன்னாள் எம்.பி. எல்.கணேசன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா, தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம், கவிஞர் காசி அனந்தன், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன், காமராஜர் ஆதித்தனார் கழக தலைவர் சிலம்பு சுரேஷ், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

திரைத்துறை சார்பில் கவிஞர் வைரமுத்து, இயக்குனர்கள் பாரதிராஜா, விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, தங்கர்பச்சான், கவுதமன், தயாரிப்பாளர் எஸ்.தாணு, நடிகர்கள் விஜயகுமார், தாமு, பயில்வான் ரங்கநாதன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு ம.நடராஜனுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் ம.நடராஜனின் உடல் பிற்பகல் 12.45 மணி அளவில் ஆம்புலன்சு வாகனம் மூலம் பெசன்ட் நகரில் இருந்து தஞ்சை மாவட்டத்தில் உள்ள அவருடைய சொந்த ஊரான விளாருக்கு எடுத்து செல்லப்பட்டது. இன்று (புதன்கிழமை) மாலை உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. 

Next Story