ஊட்டி நகரில் கலெக்டர் திடீர் ஆய்வு


ஊட்டி நகரில் கலெக்டர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 21 March 2018 3:30 AM IST (Updated: 21 March 2018 12:45 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி நகரில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா திடீர் என்று ஆய்வு செய்தார்.

ஊட்டி,

ஊட்டியில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெற உள்ளது. இதையொட்டி ரோஜா கண்காட்சி, மலர் கண்காட்சி, கோடை விழா, படகு போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. ஊட்டி நகரின் மையப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 16-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் ஒரு சமூகத்தினர் சார்பில், அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சிகள் ஒரு மாதம் வரை நடக்கிறது. அடுத்த (ஏப்ரல்) மாதம் 17-ந் தேதி தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

கோடை சீசனில் ஊட்டிக்கு வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள், மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவுக்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிராமப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வருகை தர உள்ளனர்.

முதல் கட்டமாக நெடுஞ்சாலைத்துறை சார்பில், ரூ.3 கோடி செலவில் ஊட்டி மத்திய பஸ் நிலையம் முதல் லோயர் பஜார், மணிக்கூண்டு, கமர்சியல் சாலை வழியாக சேரிங்கிராஸ் வரை சாலை சீரமைக்கப்பட்டு உள்ளது. சாலையோரங்களில் நடைபாதை அமைக்கவும் மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ரவி, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் முருகன் ஆகியோர் ஊட்டி நகரில் திடீரென கூட்டு ஆய்வு நடத்தினார்கள்.

ஆய்வின்போது, சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, வால்சம்பர் சாலை சந்திப்பு, மணிக்கூண்டு, ஊட்டி நகராட்சி மார்க்கெட் முன்பகுதி, மத்திய பஸ் நிலையம், புனித தாமஸ் ஆலய சந்திப்பு, ஏ.டி.சி. பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் நடந்தது. கூட்டு ஆய்வில் வாகனங்களை நிறுத்த இடங்கள் தேர்வு செய்வது, சாலையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்பு, பழுதடைந்த நடைபாதை, வாகனங்கள் நடைபாதையில் நிறுத்தப்படாமல் இருக்க புதியதாக அமைக்கப்படும் நடைபாதைகளை உயரப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

மேலும் கமர்சியல் சாலையில் உள்ள கேஷினோ சந்திப்பு முதல் சேரிங்கிராஸ் வரை சீசன் காலங்களில் வாகன போக்குவரத்து இல்லாமல் சுற்றுலா பயணிகள் தங்களது குழந்தைகளுடன் அமைதியாக நடந்து செல்லும் வகையில் ஆய்வு முறையில் செயல்படுத்தலாமா, அந்த சாலையில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டால் மாற்று வழியாக வால்சம்பர் சாலை மற்றும் பிரிக்ஸ் சாலையை பயன்படுத்தலாமா, ஊட்டியில் குவியும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுப்பது குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடந்தது. இந்த ஆய்வில் போலீஸ் துணை சூப்பிரண்டு திருமேனி, ஊட்டி நகராட்சி சுகாதார அதிகாரி முரளி சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து ஊட்டி நகர மக்கள் கூறும்போது, சாலையோரத்தில் ஆவின் என்ற பெயரில் உரிய அனுமதி பெறாமல் புதியதாக முளைத்தெழும் கடைகள், பெட்டிக்கடைகள் போன்ற ஆக்கிரமிப்புகளை அகற்றினால் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இருக்கும். சீசன் காலங்களில் ஊட்டி நகர் முழுவதும் மின்விளக்குகள் இரவு நேரத்தில் மின்தடை என்ற பெயரில் எரிவது இல்லை. இரவு முழுவதும் மின் விளக்குகள் முழுமையாக எரிய வேண்டும். ஊட்டி நகரில் குப்பைகள் தேங்கக் கூடாது என்றனர். 

Next Story