விழுப்புரத்தில் பரபரப்பு: கட்டிட ஒப்பந்ததாரர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு


விழுப்புரத்தில் பரபரப்பு: கட்டிட ஒப்பந்ததாரர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
x
தினத்தந்தி 21 March 2018 3:30 AM IST (Updated: 21 March 2018 1:55 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் கட்டிட ஒப்பந்ததாரர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலை திருநகரை சேர்ந்தவர் பொற்செழியன் (வயது 55), கட்டிட ஒப்பந்ததாரரான இவர் வீடு, கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் கட்டி விற்கும் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி (52). இவர்களுடைய மகனும், மகளும் வெளியூரில் உள்ளதால் வீட்டில் பொற் செழியனும், செல்வியும் மட்டும் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர்கள் இருவரும் வீட்டின் மேல்தளத்தில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் வீட்டின் முன்பக்கம் வெடிவெடித்தது போன்று பயங்கர சத்தம் கேட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த பொற்செழியனும், அவரது மனைவி செல்வியும் கீழே வந்து பார்த்தபோது அங்கு தீப்பற்றி புகை மண்டலம்போல் இருந்தது. அதே இடத்தில் உடைந்த பாட்டில் துண்டுகள், சின்ன, சின்ன ஆணிகள் சிதறிக்கிடந்தன. மேலும் துணியால் ஆன திரி எரிந்து கொண்டிருந்தது. அப்பகுதி முழுவதும் பெட்ரோல் வாசம் வீசியது. இதுகுறித்து உடனடியாக பொற்செழியன், விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சத்தியசீலன், ஆனந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் உடைந்த பாட்டில் துண்டுகள், ஆணிகள், திரி ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், பொற்செழியன் வீட்டில் யாரோ மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச்சென்றதை உறுதி செய்தனர்.

மேலும் தொழில் முன் விரோதம் காரணமாக பொற்செழியன் வீட்டில் யாரேனும் பெட்ரோல் குண்டு வீசி விட்டு சென்றனரா? என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இதற்கிடையே கடந்த 9-ந் தேதி அதே தெருவில் பொற்செழியன் வீட்டின் அருகில் வசித்து வரும் பெட்ரோல் பங்க் உரிமையாளரான பிரகாசிடம் ரவுடி இருசப்பனின் பெயரை கூறி ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டியதாக பாபுராஜ், சூரியபிரகாஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டதால், மீண்டும் பிரகாசை மிரட்டும் வகையில் பாபுராஜ், சூரியபிரகாஷின் நண்பர்கள் யாரேனும் பிரகாஷ் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசுவதற்கு பதிலாக தவறுதலாக பொற்செழியன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசினார்களா? என்றும் அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகப்படும்படியாக 2 பேரை போலீசார் பிடித்து அவர்களிடம் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story