மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து தி.மு.க.வினர் சாலைமறியல்


மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து தி.மு.க.வினர் சாலைமறியல்
x
தினத்தந்தி 21 March 2018 4:00 AM IST (Updated: 21 March 2018 2:52 AM IST)
t-max-icont-min-icon

ராசிபுரம், குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க.வினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நாமக்கல்,

தமிழகத்தில் ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு அனுமதி அளித்த தமிழக அரசை கண்டித்து சாலை மறியல் செய்த தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், அவரை விடுதலை செய்யக் கோரியும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தி.மு.க.வினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக, ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், நாமகிரிப்பேட்டை ஒன்றிய செயலாளருமான கே.பி.ராமசுவாமி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார், ராசிபுரம் நகர செயலாளர் என்.ஆர்.சங்கர், ராசிபுரம் ஒன்றிய செயலாளர் கே.பி.ஜெகநாதன், சீராப்பள்ளி பேரூராட்சி தி.மு.க. செயலாளர் செல்வராஜூ, மாவட்ட வர்த்தக அணி துணை தலைவர் தவசி நந்தகுமார், பொதுக்குழு உறுப்பினர் அழகரசு, ராசிபுரம் நகர இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்திக், சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினரை ராசிபுரம் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் காவலில் வைத்தனர்.

தமிழக சட்டசபை எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து குமாரபாளையத்தில் தி.மு.க.வினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் நாமக்கல் மேற்கு மாவட்ட துணைச்செயலாளர் எஸ்.சேகர் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் குமாரபாளையம் நகரச் செயலாளர் வெங்கடேசன், நிர்வாகிகள் பரமசிவம், ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து, பள்ளிபாளையம் நகர தி.மு.க.வினர் பஸ் நிலையத்தில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். நகர செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் மாவட்ட பொருளாளர் குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் ரமேஷ், வினோத், ராதா, நகர அவைத்தலைவர் ஜான், நூர் செல்வம், மாவட்ட பிரதிநிதி மாதேஸ்வரன், இளைஞர் அணி நிர்வாகி சதீஷ், நகர பொருளாளர் முருகன் மற்றும் பலர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் காவலில் வைக்கப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை விடுதலை செய்யக்கோரியும் திருச்செங்கோட்டில் நேற்று மாலை தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்செங்கோடு புதிய பஸ் நிலைய ரவுண்டானா முன்பு தி.மு.க. நகர செயலாளர் நடேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நகர அவைத்தலைவர் முத்து, ஒன்றிய செயலாளர் தங்கவேல், நகர நிர்வாகிகள் ராஜேந்திரன், ராஜவேல் உள்பட நகர, வார்டு, கிளை தி.மு.க. இளைஞர் அணி மற்றும் சார்பு அணியினர் கலந்து கொண்டனர். 

Next Story