ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு: மாவட்டத்தில், தி.மு.க.வினர் சாலைமறியல்


ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு: மாவட்டத்தில், தி.மு.க.வினர் சாலைமறியல்
x
தினத்தந்தி 21 March 2018 3:30 AM IST (Updated: 21 March 2018 5:21 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில், ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சேலம், 

விசுவ இந்து பரிஷத் இயக்கம் சார்பில் ராம ராஜ்ய ரதயாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நேற்று மறியலில் ஈடுபட்ட தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். சேலம் மாவட்டத்தில் தி.மு.க.வினர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், ராம ராஜ்ய ரதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தம்மம்பட்டியில் நேற்று பஸ்நிலையம் முன்பு தி.மு.க.வினர் சாலைமறியல் போராட்டம் செய்தனர். தம்மம்பட்டி தி.மு.க. நகர செயலாளர் வி.பி.ஆர். ராஜா தலைமையில் நடைபெற்றது. கெங்கவல்லி சட்டமன்ற முன்னாள் எம்.எல்.ஏ. சின்னதுரை போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் செந்தாரப்பட்டி நகரசெயலாளர் முருகேசன் உட்பட 40 பேர் கலந்து கொண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த தம்மம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் பஸ் மறியலில் ஈடுபட்ட 40 பேரை கைது செய்தார்.

ஆத்தூர் நகர தி.மு.க. சார்பில் பஸ்நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் மு.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலளார் டாக்டர் வெ.செழியன், முல்லை பன்னீர்செல்வம், மாணிக்கம் முன்னாள் கவுன்சிலர்கள் கமால்பாஷா, காசியம்மாள், வேலுமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கொளத்தூர் பஸ் நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 35 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஓமலூர் பஸ்நிலையம் அண்ணா சிலை அருகே தி.மு.க. வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஓமலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் குப்புசாமி தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சின்ராஜ், மாவட்ட துணை செயலாளர் திருநாவுக்கரசு, ஓமலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமரன், காடையாம்பட்டி ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், தாரமங்கலம் ஒன்றிய செயலாளர் அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட கண்டன ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து அண்ணா சிலை அருகே சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இந்த சாலைமறியலால் சேலம் -தர்மபுரி, மேட்டூர் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அறிவழகன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் கருணாகரன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் அருண்பிரசன்்னா, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்

மகுடஞ்சாவடி ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் பச்சமுத்து தலைமையில் மகுடஞ்சாவடி பஸ்நிறுத்தம் பகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காவேரி, பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் கண்ணன், விவசாய அணி சுரேஷ்குமார், இளைஞர் அணி பழனியப்பன் உட்பட 20-க்கும் மேற்பட்டவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். சங்ககிரி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் ராஜாரணவீரன் மற்றும் போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து அப்பகுதியில் உள்ள தனியார் திருமணம் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் எடப்பாடி பஸ்நிலையம் எதிரில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நகர செயலாளர் பாஷா தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் சம்பத்குமார், ஒன்றிய செயலாளர்கள் பரமசிவம், நல்லதம்பி, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆறுமுகம், மாவட்ட சிறுபான்மை பிரிவு முபாரக், முன்னாள் ஒன்றிய செயலாளர் குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் கலந்து கொண்டு சாலைமறியல் போராட்டத்தை தொடங்கி வைத்தார். மறியல் போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை எடப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் கைது செய்து வாகனத்தில் அழைத்து சென்றனர்.

மேட்டூர் பஸ்நிலையத்தில் மேட்டூர் நகர தி.மு.க. செயலாளர் காசிவிஸ்வநாதன் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். முன்னாள் கவுன்சிலர்கள் ரங்கசாமி, அமுதா உள்பட 40 பேர் கலந்து கொண்டனர். இதேபோன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை மேட்டூர் போலீசார் கைது செய்தனர். குஞ்சாண்டியூர் பஸ்நிறுத்தத்தில் நங்கவள்ளி ஒன்றிய தி.மு.க. செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் இளைஞர் அணி அமைப்பாளர் முருகன் உள்பட 25 பேர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களை கருமலைக்கூடல் போலீசார் கைது செய்தனர்.

மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து தி.மு.க.வினர் தாரமங்கலம் கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று பஸ்நிலையத்தில் சாலைமறியல் செய்தனர். தலைமை செயற்குழு உறுப்பினர் அம்மாசி தலைமையில் ஒன்றிய செயலாளர் (பொறுப்பு) ரவிக்குமார், துணைச்செயலாளர் சீனிவாசன், நகர செயலாளர் குப்பு என்ற குணசேகரன், சேகர், முத்துசாமி, ஜெயக்குமார், துரைசாமி, செல்வமணி, பாலு உள்பட 100 பேர் கலந்து கொண்டனர். தாரமங்கலம் போலீசார் இவர்களை கைது செய்து ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

தலைவாசல் ஒன்றிய தி.மு.க. சார்பில் தலைவாசல் பஸ் நிலையத்தில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றிய செயலாளர் லட்சுமணன் தலைமையில் சாலைமறியல் செய்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், கிளை செயலாளர் பிச்சமுத்து, முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் தேவேந்திரன் உள்பட 21 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொண்டலாம்பட்டி ரவுண்டானாவில் தி.மு.க.வினர் மறியல் செய்தனர். இதில் பனமரத்துப்பட்டி ஒன்றிய செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் சேலம் மேயர் ரேகா பிரியதர்சினி உள்பட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். இதனால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொண்டலாம்பட்டி போலீசார் அங்கு வந்து 60 பேரை கைது செய்து ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

Next Story