கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் 4 கட்டமாக நடக்கிறது தேர்தல் ஆணையர் ராஜேந்திரன்
கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் 4 கட்டமாக நடக்கிறது என தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
திருவண்ணாமலை,
18,775 கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் 4 கட்டமாக நடக்கிறது என்று கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் மு.ராஜேந்திரன் கூறினார்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் கூட்டுறவுத்தேர்தல் குறித்த மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையர் மு.ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கலெக்டர் கந்தசாமி, போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரேணுகாம்பாள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனரும், இணைப்பதிவாளருமான நந்தகுமார் மற்றும் பதிவாளர்கள், துணைப் பதிவாளர்கள், வாக்காளர் பட்டியல் அலுவலர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறை, பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத்துறை, மீன்வளத்துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை, கூட்டுறவு வீட்டுவசதித் துறை, பனைப்பொருள் வளர்ச்சி வாரியம், கதர் கிராம தொழில் வாரியம், தொழில் மற்றும் தொழில் வணிகத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் துறை, வேளாண்மைத்துறை, சமூகநலத்துறை, ஊரக வளர்ச்சி பஞ்சாயத்துராஜ் துறை, பட்டு வளர்ச்சித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறை, சர்க்கரைத்துறை ஆகிய 15 அரசு துறைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் 18 ஆயிரத்து 775 சங்கங்களின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் 4 கட்டமாக நடைபெற உள்ளது.
இத்தேர்தல் தொடர்பான வாக்காளர் பட்டியல் சம்பந்தப்பட்ட தேர்தல் நடைபெறும் இடங்களில் உள்ள அறிவிப்பு பலகைகளில் ஒட்டப்பட்டுள்ளது.
வேட்பு மனுத்தாக்கல் வருகிற 26-ந் தேதியும், பரிசீலனை 27-ந் தேதியும், திரும்ப பெறுதல் 28-ந் தேதியும் நடைபெறுகிறது. 28-ந் தேதியன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
மேலும், தேர்தல் வாக்குப்பதிவு முதல் கட்டமாக ஏப்ரல் 2-ந் தேதியும், 2-ம் கட்டமாக 7-ந் தேதியும், 3-ம் கட்டமாக 16-ந் தேதியும், 4-ம் கட்டமாக 23-ந் தேதியும் நடைபெறுகிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கூட்டுறவுத் தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்தல் வெளிப்படையாக, நேர்மையாக நடைபெறுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டுறவுத் தேர்தலில் முதல்முறையாக நன்னடத்தை விதிகளும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதில் எந்தவிதமான புதிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடக்கூடாது.
கூட்டுறவுத்தேர்தலில் பணிபுரிபவர்களுக்கு பணிமாறுதலோ, பதவி உயர்வோ அளிக்கக்கூடாது. மேலும், ஏற்கனவே பதவியில் இருப்பவர்களுக்கு எந்த சலுகைகளும் கிடையாது.
கூட்டுறவுத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வேட்புமனுக்களை www.co-o-p-e-l-e-ct-i-on.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நகல் எடுத்தும் வேட்புமனு தாக்கல் செய்யலாம். இக்கூட்டுறவுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னங்கள் கிடையாது. இந்த தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 2 கோடியே 17 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளார்கள்.
இதில் முதல் கட்ட தேர்தலில் மொத்தம் 1 கோடியே 87 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள். குற்ற வழக்குகளில் ஒரு ஆண்டிற்கு மேல் தண்டனை பெற்றவர்கள் 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. கூட்டுறவுத் தேர்தல் பணியில் ஒரு லட்சம் பணியாளர்கள் ஈடுபடுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story