வங்கிகளில் ரூ.1 கோடி மதிப்புள்ள 10 ரூபாய் நாணயங்கள் தேக்கத்தில் உள்ளதாக கலெக்டர் தகவல்


வங்கிகளில் ரூ.1 கோடி மதிப்புள்ள 10 ரூபாய் நாணயங்கள் தேக்கத்தில் உள்ளதாக கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 21 March 2018 5:58 AM IST (Updated: 21 March 2018 5:58 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை நகரில் உள்ள வங்கிகளில் மட்டும் ரூ.1 கோடி மதிப்புள்ள 10 ரூபாய் நாணயங்கள் தேக்கத்தில் உள்ளது என்று கலெக்டர் கந்தசாமி கூறினார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை நகரில் உள்ள வங்கிகளில் மட்டும் ரூ.1 கோடி மதிப்புள்ள 10 ரூபாய் நாணயங்கள் தேக்கத்தில் உள்ளது என்று கலெக்டர் கந்தசாமி கூறினார்.

திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள டவுன் ஹால் நடுநிலைப் பள்ளியில் நேற்று அனைத்து வங்கிகள் சார்பில் சிறப்பு நாணய மாற்று முகாம் தொடங்கியது. இந்த முகாமை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

மேலும் அவர் பொதுமக்கள் வழங்கிய ரூ.10 நாணயங்களை பெற்றுக் கொண்டு அதற்கு ரூபாய் நோட்டுகளை வழங்கினார். முகாமில் முன்னோடி வங்கி மேலாளர் இளவரசு, முன்னோடி வங்கி அதிகாரி கோவிந்தராஜன், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் கஜேந்திரன், கிளை மேலாளர் புகழேந்தி, சந்தோஷ்குமார், சம்பத் மற்றும் ஸ்டேட் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட அனைத்து வங்கி அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த முகாம் நாளை (வியாழக்கிழமை) வரை நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை முகாம் நடக்கிறது.

இதையடுத்து கலெக்டர் திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகில் உள்ள கடைகளில் ரூ.10 நாணயங்கள் அனைத்தும் செல்லும், அதனை எந்தவித அச்சமுமின்றி பெற்று கொள்ளலாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

முன்னதாக கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்களை பெரும்பாலான கடைகளில் வாங்குவதில்லை என்று குற்றச்சாட்டு வந்து உள்ளது. 10 ரூபாய் நாணயங்கள் சட்டப்படி செல்லும். 10 ரூபாய் நாணயங்கள் குறித்து தேவையற்ற வதந்திகள் பரப்பப்படுவதால் சில இடங்களில் இந்த நாணயங்களை பெற்று கொள்வதில் பொதுமக்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

பொதுமக்களின் தயக்கத்தை போக்குவதற்காக தான் இதுபோன்று முகாம்கள் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. வியாபாரிகள் மற்றும் வணிகர்களை அழைத்து 10 ரூபாய் நாணயங்கள் வாங்கி கொள்ளலாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

திருவண்ணாமலை நகரில் உள்ள வங்கிகளில் மட்டும் ரூ.1 கோடி மதிப்புள்ள 10 ரூபாய் நாணயங்கள் தேக்கத்தில் உள்ளன. யாரேனும் 10 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுத்தால் கலெக்டரிடம் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story