பிரசித்திபெற்ற மேல புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


பிரசித்திபெற்ற மேல புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 21 March 2018 9:00 PM GMT (Updated: 21 March 2018 11:28 AM GMT)

பிரசித்திபெற்ற மேல புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தென்திருப்பேரை,

பிரசித்திபெற்ற மேல புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் குரும்பூர் அருகே உள்ள மேல புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலும் ஒன்றாகும். கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதிகாலை நடை திறக்கப்பட்டு, கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள் நடந்தது. அதிகாலை 5.45 மணிக்கு கோவில் முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை நடந்தது. மாலையில் நாதசுவர கச்சேரி, இரவில் வில்லிசை கச்சேரி நடந்தது. தொடர்ந்து உற்சவர் அய்யனார் சப்பரத்தில் எழுந்தருளி, கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவில் கோவில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் உத்திரபாண்டியன் நாடார், வீரசிங் நாடார், லக்குமண பாண்டியன் நாடார், சேர்மத்துரை நாடார், அசோக்ராஜ் நாடார், ஜெயகுமார் நாடார், அழகேசன் நாடார், பாஸ்கர் நாடார் மற்றும் சுந்தரேசன், வாசகம், ஸ்ரீதர், சேர்மக்கனி, குமரகுருபரன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

10 நாள் திருவிழா

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் இரவு 11 மணிக்கு உற்சவர் அய்யனார் சப்பரத்தில் எழுந்தருளி, கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார். 6–ம் திருநாளான 26–ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.

10–ம் திருநாளான 30–ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு சிறப்பு பூஜைகள், காலை 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9 மணிக்கு பங்குனி உத்திர கும்பாபிஷேகம், மதியம் 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது. மதியம் 2 மணிக்கு பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தி சுவாமி அய்யனாரை வழிபடுகின்றனர்.

கற்பக பொன் சப்பரத்தில் சுவாமி எழுந்தருளல்

இரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, இரவு 1 மணிக்கு உற்சவர் அய்யனார் கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தருளி, மேல புதுக்குடி கிராம வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

விழா நாட்களில் தினமும் மாலையில் பட்டிமன்றம், வில்லிசை, இன்னிசை நிகழ்ச்சி போன்றவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் மற்றும் ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.

Next Story