தேனியில் மாற்றுத்திறனாளிகள் அரசு நலத்திட்டங்கள்
மாற்றுத்திறனாளிகள், அரசு நலத்திட்டங்கள் மற்றும் சலுகைகளை பெற்று பயன் அடைய வருகிற 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் பல்லவி பல்தேவ் கூறியுள்ளார்.
தேனி,
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் அரசின் பிற துறைகளான வருவாய்த்துறை, மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்டம், ஊரக வளர்ச்சித்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, தாட்கோ, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சமூக நலத்துறை, மருத்துவத்துறை, முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டுத்திட்டம், மின்சார வாரியம், மத்திய கூட்டுறவு வங்கி, முன்னோடி வங்கி ஆகியவற்றின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் நலவாரியம், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, சுயவேலைவாய்ப்பு சிறுதொழில் கடன், தாட்கோ வங்கிக்கடன், இலவச பஸ் பயண அட்டை, பசுமை வீடு, இலவச வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் வழங் கப்பட்டு வருகின்றன.
அத்துடன், மின் இணைப்பில் முன்னுரிமை, விதவை மறுமணத் திட்டம், பேறுகால உதவித்தொகை, சிறப்பு பள்ளி மற்றும் மறுவாழ்வு இல்ல சேர்க்கை, பெண்களுக்கான மானிய விலையில் ஸ்கூட்டர் பெறுதல் போன்ற திட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறலாம்.
எனவே, தேனி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் அரசு நலத்திட்டங்கள் பெறுவதற்கு விண்ணப்பம் அளிக்கலாம்.
விண்ணப்பத்துடன் தேசிய அடையாள அட்டை நகல், ரேஷன் கார்டு அல்லது ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் 4 ஆகியவற்றுடன் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அலுவலகத்தை வருகிற 31-ந் தேதிக்குள் தொடர்பு கொண்டு மனு அளித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story