தேனி-குச்சனூர் சாலையில் ஆபத்தான வளைவுகளால் விபத்து அபாயம்
தேனி-குச்சனூர் சாலையில் உள்ள ஆபத்தான வளைவுகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உப்புக்கோட்டை,
தேனியில் இருந்து குச்சனூர் செல்வதற்கு உப்புக்கோட்டை வழியாக பிரதான சாலை உள்ளது. தேனியில் இருந்து போடி வழியாக தேவாரம் செல்ல வேண்டும் என்றால் 45 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். அதேநேரத்தில் உப்புக்கோட்டை, சங்கரா புரம் வழியாக தேவாரத்துக்கு செல்ல 31 கிலோமீட்டர் தூரம் தான். மேலும் இந்த சாலை வழியாக தான் பொட்டிபுரம் அருகே உள்ள நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு செல்ல வேண்டும். இதைத்தவிர தேனி-உத்தமபாளையம், தேனி-போடி ஆகிய வழித்தடங்களுக்கு மாற்று வழியாகவும் உப்புக்கோட்டை சாலை திகழ்கிறது. தேனியில் இருந்து உப்புக்கோட்டை வழியாக குச்சனூர், உத்தமபாளையம், போடி, தேவாரம் ஆகிய ஊர்களுக்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட பஸ்கள் சென்று வருகின்றன. லாரி, வேன், கார், மோட்டார் சைக்கிள் என ஏராளமான வாகனங்கள் அந்த சாலை வழியாக செல்கின்றன.
உப்புக்கோட்டை விலக்கில் இருந்து குச்சனூர் செல்லும் சாலையில், பாலார்பட்டி ஒத்த வீடு வரை 6 இடங்களில் அபாயகரமான வளைவுகள் உள்ளன. மேலும் அந்த பகுதியில் சாலையோரத்தில் செடி, கொடிகள் படர்ந்து புதர் மண்டி காட்சி அளிக்கிறது. வளைவுகளில் திரும்பும்போது எதிரே வருகிற வாகனங்கள் தெரிவதில்லை. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக போடேந்திரபுரம்-சிங்காரக்கோட்டை ஒத்த வீடு வளைவுகளில் கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்திருக்கின்றன. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு போடேந்திரபுரம் வளைவில் ஏற்பட்ட விபத்தில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். தேனி-குச்சனூர் சாலையில் அபாயகரமான வளைவுகள் உள்ள இடங்களில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story