இன்ஸ்பெக்டரின் ஜீப் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை


இன்ஸ்பெக்டரின் ஜீப் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 22 March 2018 4:00 AM IST (Updated: 22 March 2018 2:31 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி அருகே வாகன சோதனையின்போது போலீஸ் இன்ஸ்பெக்டரின் ஜீப் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற லாரியை பிடித்த போலீசார் இதுதொடர்பாக டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தர்மபுரி,

கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து மதுபானங்கள் தர்மபுரி மாவட்டத்தின் வழியாக கடத்தி செல்லப்படுவதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் மேற்பார்வையில் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று அதிகாலை மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன் தலைமையில் போலீசார் காரிமங்கலம் அருகே உள்ள நாகனம்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர். ஆனால் போலீஸ் ஜீப் மீது மோதிய அந்த லாரி நிற்காமல் வேகமாக சென்றது. இந்த சம்பவத்தில் போலீசார் உயிர் தப்பினர். இதுபற்றி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

டிரைவரிடம் விசாரணை

இதையடுத்து தர்மபுரி போலீசார் அந்த லாரியை மடக்கி பிடித்தனர். அந்த லாரியை ஓட்டி வந்த டிரைவரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த ரகுபதி (வயது 40) என தெரியவந்தது. வேகமாக வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து போலீஸ் இன்ஸ்பெக்டரின் ஜீப் மீது லாரி மோதி விட்டதாகவும், அதனால் ஏற்பட்ட அச்சத்தால் லாரியை நிறுத்தாமல் ஓட்டி வந்ததாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஏதேச்சையாக அந்த சம்பவம் நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்று ரகுபதியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story