தனியார் விடுதியில் பெண் மர்ம சாவு உடன் தங்கியிருந்த கள்ளக்காதலனுக்கு போலீசார் வலைவீச்சு


தனியார் விடுதியில் பெண் மர்ம சாவு உடன் தங்கியிருந்த கள்ளக்காதலனுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 22 March 2018 3:45 AM IST (Updated: 22 March 2018 2:33 AM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்த பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவருடன் தங்கியிருந்த கள்ளக்காதலன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

வேளாங்கண்ணி,

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே சக்கராப்பள்ளி பெருமாக்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி சோபநாயகி (வயது31). இவர்களுக்கு வசந்த், கிஷோர் என்ற 2 மகன்கள் உள்ளனர். சோபநாயகிக்கும், அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்(38) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்தது.

இந்த கள்ளக்காதல் விவகாரம் சரவணனுக்கு தெரிய வந்தது. இது தொடர்பாக அவர் தனது மனைவியை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். சோபநாயகி தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

விடுதியில் ஒன்றாக தங்கினர்

இந்த நிலையில் சோபநாயகியும், சுரேசும் கடந்த 19-ந் தேதி நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு வந்தனர். அங்கு உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து இருவரும் தங்கி இருந்தனர். இவர்கள் தங்கி இருந்த அறை நேற்று முன்தினம் இரவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருப்பதை விடுதி ஊழியர்கள் பார்த்தனர்.

ஆனால் அறைக்கு உள்ளே மின் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் அறையின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சோபநாயகி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவருடன் தங்கி இருந்து அவரது கள்ளக் காதலனை காணவில்லை. இதுகுறித்து விடுதி வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

கள்ளக்காதலனுக்கு வலைவீச்சு

தகவலின்பேரில் வேளாங்கண்ணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமிநாதன் மற்றும் போலீசார் விடுதிக்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சோபநாயகியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சோபநாயகி எப்படி இறந்தார்? கள்ளக்காதல் விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தலைமறைவான அவருடைய கள்ளக்காதலன் சுரேசை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story