புதுக்கோட்டை அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து திராவிடர் கழகத்தினர் சாலை மறியல்


புதுக்கோட்டை அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து திராவிடர் கழகத்தினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 21 March 2018 10:45 PM GMT (Updated: 21 March 2018 9:03 PM GMT)

புதுக்கோட்டை அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து நீடாமங்கலத்தில் திராவிடர் கழகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நீடாமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் உள்ள பெரியார் சிலை உடைக்கப்பட்டது. இதை கண்டித்து திராவிடர் கழகத்தினர் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் திராவிடர் கழகத்தினர் நேற்றுமுன்தினம் இரவு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு திராவிடர் கழக நகர தலைவர் அமிர்தராஜ் தலைமை தாங்கினார். பகுத்தறிவாளர் கழக நிர்வாகிகள் சிவஞானம், கல்யாணசுந்தரம், திராவிடர் கழக ஒன்றிய தலைவர் கணேசன், நகர செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தின் போது பெரியார் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுபற்றி தகவல் அறிந்த நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 16 பேரை கைது செய்தனர். பின்னர் விடுவித்தனர். இந்த சாலை மறியல் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். சாலை மறியல் காரணமாக திருவாரூர்-தஞ்சை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story