குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 22 March 2018 4:30 AM IST (Updated: 22 March 2018 2:34 AM IST)
t-max-icont-min-icon

கந்தர்வகோட்டை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கந்தர்வகோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், கோமாபுரம் ஊராட்சியை சேர்ந்த அண்ணாநகர் பகுதியில் ஏராள மானவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் குடிநீருக்கான மின்மோட்டார் பழுதடைந்த காரணத்தினால் கடந்த 15 நாட்களாக குடிநீர் வினியோகமின்றி இப்பகுதி பொதுமக்கள் அவதி அடைந்தனர். இதனால் இப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றிலிருந்து குடிநீரை கொண்டுவந்து பயன்படுத்தும், அவலநிலை ஏற்பட்டது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் அண்ணாநகரில் உள்ள கந்தர்வகோட்டை- செங்கிப்பட்டி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் மற்றும் ஊரக வளர்்ச்சித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குடிநீர் வசதி செய்து கொடுக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் கந்தர்வகோட்டை- செங்கிப்பட்டி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story