முதுமலை வனப்பகுதிகளில் தொட்டிகளில் ஊற்றப்படும் தண்ணீரை குடிக்க காட்டு யானைகள் படையெடுப்பு


முதுமலை வனப்பகுதிகளில் தொட்டிகளில் ஊற்றப்படும் தண்ணீரை குடிக்க காட்டு யானைகள் படையெடுப்பு
x
தினத்தந்தி 22 March 2018 2:41 AM IST (Updated: 22 March 2018 2:41 AM IST)
t-max-icont-min-icon

முதுமலை வனப்பகுதிகளில் தொட்டிகளில் ஊற்றப்படும் தண்ணீரை குடிக்க காட்டு யானைகள் படையெடுத்து வருகின்றன.

மசினகுடி,

நீலகிரி மாவட்டம் 56 சதவீதம் வனப்பகுதியை கொண்டது. இந்த வனப்பகுதிகளில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைப்புலிகள், காட் டெருமைகள், மான்கள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. குறிப்பாக முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் நீலகிரி வடக்கு வனக்கோட்டத்திற்குட்பட்ட சீகூர், சிங்காரா, தெங்குமரஹாடா வனப்பகுதிகளில் அதிகமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனப்பகுதிகளில் மழை காலங்களில் பச்சை பசுமையாகவும், கோடை காலத்தில் வறட்சியின் காரணமாக வறண்டும் காணப்படுவது வழக்கம்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கோடையின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. அதிகபட்ச வெப்ப நிலையாக 28 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி உள்ளது. வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதிகள் வறண்டு வருவதுடன் நீர்நிலைகளும் தண்ணீர் இன்றி காட்சியளிக்க தொடங்கி உள்ளன.

குறிப்பாக முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தேக்கு மரங்களும், புற்களும் காய்ந்து எளிதில் தீ பற்றும் நிலையில் உள்ளன. சிறுகுட்டைகள் மற்றும் தடுப்பணைகள் வறண்டு வருகின்றன. இதனால் வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இருப்பினும் வனப்பகுதிகளில் ஆங்காங்கே அமைக்கப்பட்டு உள்ள தொட்டிகளில் வனத்துறையினர் தண்ணீர் ஊற்றி வருகின்றனர். வாகனங்களில் கொண்டு செல்லும் இந்த தண்ணீர் 10 ஆயிரம் லிட்டர் மற்றும் 15 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டிகளில் நிரப்பி வருகின்றனர். அத்துடன் தொட்டிகளில் தண்ணீர் தீர்ந்தவுடன் மீண்டும் நிரப்பும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பணி கடந்த மாதம் தொடக்கம் முதலே நடைபெற்று வருகிறது. இதனால் முதுமலையில் உள்ள வனவிலங்குகள் தண்ணீர் தட்டுப்பாடு இன்றி வாழ்ந்து வருகின்றன. குறிப்பாக சில தொட்டிகளில் வனத்துறையினர் தண்ணீர் ஊற்ற செல்லும் போது காட்டு யானைகள் படையெடுத்து வருவதை காண முடிகிறது. அந்த யானைகள் தண்ணீர் ஊற்றும் போதே உற்சாகமாக தண்ணீர் குடிப்பதுடன் உடலின் மீதும் ஊற்றி வெப்பத்தை தணித்து வருகின்றன. அதேபோல தாகத்துடன் குட்டிகளுடன் தண்ணீர் தொட்டிக்கு வரும் யானைகள் தண்ணீரை தாகம் தீர குடித்துவிட்டு அதே பகுதியில் நீண்ட நேரம் நின்று செல்கின்றன. யானைகளின் இந்த செயல்களை கண்டு வனத்துறையினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். 

Next Story