நல்லூர் ஊராட்சியில் மோசமான சாலை, குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி

நல்லூர் ஊராட்சியில் மோசமான சாலை மற்றும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இது தொடர்பாக அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என ஊராட்சி மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
செங்குன்றம்,
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்டது நல்லூர் ஊராட்சி.
இந்த ஊராட்சியில் ஆட்டந்தாங்கல், விஜயநல்லூர், அம்பேத்கர்நகர், பெருமாளடிபாதம், நாகத்தம்மன் நகர், அன்னை இந்திரா நினைவு நகர், சோலையம்மன் நகர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட ஊர்கள் உள்ளன. இங்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள சாலைகள் உரிய பராமரிப்பின்றி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சுமார் 5 ஆண்டுகளாக இந்த அவல நிலை நீடிக்கிறது. இது தொடர்பாக பலமுறை புகார் அளிக்கப்பட்டும் சாலைகளை சரி செய்ய, நல்லூர் ஊராட்சி எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மாதவரம் மூர்த்தி அமைச்சராக இருந்தபோது செங்குன்றத்தை அடுத்த பம்மதுகுளம், சோலையம்மன்நகர், ஆட்டந்தாங்கல், பி.டி.மூர்த்தி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மினி பஸ் சேவை தொடங்கப்பட்டது.
இந்நிலையில், சாலைகளின் நிலைமை மிகவும் மோசமாகி விட்டதை காரணம் காட்டி, கடந்த 6 மாத காலமாக மினி பஸ்கள் இயக்குவதை நிறுத்திவிட்டனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க, நல்லூர் ஊராட்சி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் ராட்சத ஆழ்துளை கிணறுகளை அமைத்து தண்ணீரை எடுத்து கேன்களில் அடைத்து விற்பனை செய்கிறார்கள்.
இதனால் ஊராட்சி ஆழ்துளை கிணறுகளுக்கு குறைவான அளவிலேயே நீர் கிடைக்கிறது. இதன் காரணமாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு, ஒரு குடம் தண்ணீரை 10 ரூபாய் கொடுத்து வாங்கும் அவல நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
மேலும், ஊராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சாலை ஓரங்களில் கொட்டப்படும் குப்பைகள் நீண்டகாலமாக அகற்றப்படாமல் அப்படியே இருக்கிறது.
இதனால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு நல்லூர் ஊராட்சிக்கு வந்த திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லியிடம் ஊராட்சியின் மோசமான நிலைமை குறித்து பொதுமக்கள் விளக்கினர்.
அப்போது அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துவிட்டு சென்றார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.