இணைப்பு உடைந்து மின்சார ரெயில் பெட்டிகள் இரண்டாக பிரிந்ததால் பரபரப்பு


இணைப்பு உடைந்து மின்சார ரெயில் பெட்டிகள் இரண்டாக பிரிந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 22 March 2018 4:30 AM IST (Updated: 22 March 2018 3:44 AM IST)
t-max-icont-min-icon

சென்னை அருகே ஓடிக்கொண்டிருந்த மின்சார ரெயிலின் பெட்டிகள் இணைப்பு பகுதி உடைந்ததால் அந்த ரெயில் இரண்டாக பிரிந்து நின்றது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வண்டலூர்,

சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி நேற்று காலை 10.20 மணிக்கு 12 பெட்டிகள் கொண்ட ஒரு மின்சார ரெயில் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. காலை 11.35 மணி அளவில் ஊரப்பாக்கம் ரெயில் நிலையத்தில் பயணிகள் இறங்குவதற்கு வசதியாக பிளாட்பாரத்தில் ரெயிலை நிறுத்துவதற்காக டிரைவர் ரெயிலை மெதுவாக இயக்கினார்.

அப்போது பாதி பிளாட்பாரத்தை ரெயில் கடந்தபோது திடீரென முன்பக்க என்ஜின் பகுதியில் இருந்து 6-வது பெட்டியின் பின்புறத்தில் பெட்டியின் இணைப்பு பகுதி உடைந்தது. இதனால் என்ஜினுடன் இருந்த முதல் 6 பெட்டிகள் பிளாட்பாரம் அமைந்துள்ள பகுதியில் நின்றது. மற்ற 6 பெட்டிகளும் பிளாட்பாரம் இல்லாத பகுதியிலும் பிரிந்து தனியாக நின்றது. இணைப்பு பகுதி உடைந்தபோது பலத்த சத்தமும் கேட்டது.

இதனால் ரெயிலில் இருந்த பயணிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டது. ஏதோ விபத்து ஏற்பட்டுவிட்டது என்ற அச்சத்திலும், எதற்காக ரெயில் பெட்டிகள் தனித்தனியாக பிரிந்து நிற்கிறது என்பது தெரியாத காரணத்தினாலும், பதற்றத்துடன் ஒரே நேரத்தில் முண்டியடித்தவாறு ரெயிலில் இருந்த பயணிகள் கீழே இறங்கி நாலாபுறமும் சிதறி ஓடினர். ரெயில் ஏறக் காத்திருந்த பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

ரெயில் பெட்டிகளை இணைக்கும் பகுதி உடைந்து ரெயில் பெட்டிகள் இரண்டாக நிற்பது பற்றி ரெயில் டிரைவர் உடனடியாக ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே அதிகாரிகள் பெட்டியின் உடைந்த இணைப்பு பகுதியை ஆய்வு செய்தனர்.

பின்னர் தனித்தனியாக பிரிந்து நின்ற ரெயில் பெட்டிகளை அருகில் உள்ள கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கு உள்ள மாற்றுப்பாதை மூலம் தாம்பரம் பணிமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த ரெயிலில் வந்த பயணிகள் அனைவரும் மிகவும் அவதிப்பட்டனர். ரெயில் நிலையத்தில் இருந்து சிறிது தூரம் நடந்துசென்று பஸ் மூலம் தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு சென்றனர். மேலும் இந்த சம்பவத்தின் காரணமாக தாம்பரம்-செங்கல்பட்டு, செங்கல்பட்டு-தாம்பரம் இடையே மின்சார ரெயில், மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஒரு சில விரைவு ரெயில்களின் சேவை 1 மணி நேரம் பாதிக்கப்பட்டது.

இது குறித்து ரெயில்வே துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ஊரப்பாக்கம் ரெயில் நிலையத்தில் நிற்பதற்காக ரெயிலை டிரைவர் வேகம் குறைவாக இயக்கியதால் ரெயில் பெட்டிகள் இரண்டாக பிரிந்த பிறகும் எந்த விதமான அசம்பாவிதமும் ஏற்படவில்லை, இதுவே ரெயில் 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்போது பெட்டிகளுக்கான இணைப்பு பகுதி உடைந்து இருந்தால் பெரிய அளவில் விபத்து ஏற்பட்டு இருக்கும்.

இது போன்ற சம்பவம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தாம்பரம் அருகே ஏற்பட்டுள்ளது. இது 2-வது சம்பவம் ஆகும். இந்த சம்பவம் குறித்து தாம்பரம் பணிமனை ஊழியர்கள், மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படும். இனி வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story