திருப்புலிவனம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும், விவசாயிகள் கோரிக்கை


திருப்புலிவனம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும், விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 22 March 2018 4:00 AM IST (Updated: 22 March 2018 3:56 AM IST)
t-max-icont-min-icon

திருப்புலிவனம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு,

காஞ்சீபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் திருவடிசூலம் ஊராட்சிக்கு உட்பட்டது திருப்புலிவனம் கிராமம். இந்த ஊராட்சியில் சுமார் 700 ஏக்கரில் நெல் மற்றும் காய்கறிகளை அந்த பகுதி விவசாயிகள் உற்பத்தி செய்து வருகின்றனர். இந்த நிலையில் விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த நெல்பயிர்களை அறுவடை செய்து கிராம சாலைகளில் போட்டு நெல்லை தனியாகவும் வைக்கோலை தனியாகவும் பிரித்து எடுக்கின்றனர்.

இதனால் அந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் பாதிப்புக்குள்ளாகின்றனர். விவசாயிகள் மீதும் வாகனங்கள் மோதும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் களத்து மேடு இல்லாததால் நாங்கள் அறுவடை செய்த நெல்பயிர்களை சாலையில் போட்டு நெல் தனியாகவும், வைக்கோல் தனியாகவும் பிரித்து எடுக்கிறோம்.

இவ்வாறு செய்யும்போது வாகனங்கள் ஏறி அரிசிகள் உடைகின்றன. மேலும் கனரக வாகனங்கள் செல்லும் போது வைக்கோல் தூள், தூளாக போகிறது. எங்களுக்கென்று அரசு நெல் கொள்முதல் நிலையம் இல்லை.

இதனால் தரகர்கள் எங்கள் நிலத்திற்கு நேரில் வந்து அடிமாட்டு விலைக்கு நெல் மூட்டைகளை வாங்கி செல்கின்றனர்.

இதனால் லாபம் இழந்து நஷ்டத்தில் தவிக்கிறோம்.

ஆகவே அரசு திருப்புலிவனம் கிராமத்தில் களத்துமேடு அமைத்து கொடுக்க வேண்டும். நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story