ரூ.3 கோடி செலவில் நஞ்சை ஊத்துக்குளி வாய்க்கால் சீரமைக்கும் பணி தீவிரம்


ரூ.3 கோடி செலவில் நஞ்சை ஊத்துக்குளி வாய்க்கால் சீரமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 22 March 2018 3:30 AM IST (Updated: 22 March 2018 4:32 AM IST)
t-max-icont-min-icon

நஞ்சை ஊத்துக்குளி வாய்க்கால் சீரமைக்கும் பணி ரூ.3 கோடி செலவில் தீவிரமாக நடந்து வருகிறது.

ஈரோடு,

ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து நஞ்சை ஊத்துக்குளி வாய்க்கால் பிரிந்து செல்கிறது. கீழ்பவானி வாய்க்காலின் கசிவுநீரும், மழைநீரும் சூரம்பட்டி அணைக்கட்டுக்கு வந்து சேருகிறது. அங்கிருந்து மதகு வழியாக வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாய்க்கால் பராமரிக்கப்படாமல் இருந்ததால், தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் சூரம்பட்டி அணைக்கட்டில் தேங்கும் தண்ணீர் பெரும்பள்ளம் ஓடையில் வீணாக சென்றது. மேலும், நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலில் வீடு, கடை, கோவில்கள் கட்டப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டன. அதன்பின்னர் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுபடி வாய்க்கால் கரையோரம் இருந்த ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறையினர் அகற்றினார்கள்.

தனியார் அமைப்புகளின் நிதி உதவியுடன் நஞ்சை ஊத்துக்குளி வாய்க்கால் தூர்வாரப்பட்டது. இதேபோல் சூரம்பட்டி அணைக்கட்டும் தூர்வாரப்பட்டதால், அங்கு தண்ணீர் முழுமையாக சேமித்து வைக்க முடிந்தது. மேலும், அணைக்கட்டில் கழிவுநீர் கலக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனவே கடந்த பல ஆண்டுகளாக கவனிக்கப்படாமல் இருந்த வாய்க்காலை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டபோது சூரம்பட்டி அணைக்கட்டுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

காசிப்பாளையம், மூலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செல்லும் வாய்க்கால் சுமார் 25 அடி ஆழமாக இருந்ததாலும், அங்கு பாறைகள் அதிகமாக காணப்பட்டதாலும் தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. மேலும், கடைமடை வரை சீராக தண்ணீர் செல்லவில்லை. எனவே வாய்க்காலை முழுமையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலை சீரமைப்பதற்காக பொதுப்பணித்துறையின் நீர் வளம், நில வளம் திட்டத்தின் கீழ் ரூ.3 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த வாய்க்காலின் மொத்த நீளம் 12 கிலோ மீட்டராகும். நிலத்தடி நீர்மட்ட மேம்பாட்டுக்காக வாய்க்கால் பெரிதும் உதவுகிறது. இதனால் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் கான்கிரீட் தளம் அமைக்கப்படுகிறது. அதாவது மூலப்பாளையம், லக்காபுரம், முத்துகவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செல்லும் வாய்க்காலில் கான்கிரீட் அமைக்கப்படும்.

தேவைப்படும் இடங்களில் மட்டும் மொத்தம் 2 கிலோ மீட்டருக்கு கான்கிரீட் போடப்படும். மேலும், ஆங்காங்கே பாறைகள் அதிகமாக இருப்பதால் வாய்க்காலில் தண்ணீர் சீராக செல்வதில்லை. அங்கு பாறைகள் வெட்டப்பட்டு வாய்க்கால் சீரமைக்கப்படுகிறது. எனவே சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து கடைமடை வரை தண்ணீர் சீராக செல்லும் வகையில் வாய்க்கால் முழுமையாக சீரமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story