பெங்களூருவில் ஸ்கூட்டர் திருட்டில் ஈடுபட்ட பெண் கைது


பெங்களூருவில் ஸ்கூட்டர் திருட்டில் ஈடுபட்ட பெண் கைது
x
தினத்தந்தி 22 March 2018 4:41 AM IST (Updated: 22 March 2018 4:41 AM IST)
t-max-icont-min-icon

வாதநோயால் பாதிக்கப்பட்ட தாய்க்கு சிகிச்சை அளிக்க கைவரிசை காட்டினார்.

பெங்களூரு,

பெங்களூருவில், ஸ்கூட்டர் திருட்டில் ஈடுபட்டு வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் வாதநோயால் பாதிக்கப்பட்ட தாய்க்கு சிகிச்சை அளிக்க அவர் கை வரிசை காட்டியது தெரியவந்துள்ளது.

பெங்களூரு புலிகேசி நகர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஸ்கூட்டரில் வந்த பெண்ணை போலீசார் மறித்தனர். ஸ்கூட்டருக்கான ஆவணங்களை காண்பிக்கும்படி அவரிடம் கேட்டனர். ஆனால், அவரிடம் அந்த ஆவணங்கள் இல்லை. இதுபற்றி விசாரித்தபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால், சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில், அவர் பெங்களூரு ராமமூர்த்தி நகரில் உள்ள என்.ஆர்.ஐ. லே-அவுட்டில் வசித்து வரும் ரோஷினி பிரசாந்த் (வயது 36) என்பதும், அவர் தனது கணவரை பிரிந்து தாயாருடன் வாழ்ந்து வருவதும் தெரியவந்தது. மேலும், அவர் ஸ்கூட்டர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

தந்தை இறந்ததால் அவருடைய தாய் ரோஷினி பிரசாந்துடன் வசித்து வந்துள்ளார். மேலும் அவரது தாய் வாதநோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாலும், தாயின் சிகிச்சைக்கு அவரிடம் பணம் இல்லாததாலும் ரோஷினி பிரசாந்த் ஸ்கூட்டர்களை திருடி கைவரிசை காட்டியதும் தெரியவந்தது. பானசவாடி, பிரேசர் டவுனில் உள்ள மோட்டார் சைக்கிள்கள் விற்பனை நிலையத்துக்கு வாகனம் வாங்குவது போல் செல்லும் அவர் தண்ணீர் வேண்டும் எனக்கூறி ஊழியரின் கவனத்தை திசைதிருப்பி 2 ஸ்கூட்டர்கள் திருடியதும் தெரியவந்தது.

திருட்டில் ஈடுபட செல்லும்போது கண்காணிப்பு கேமராவில் அவருடைய முகம் பதிவாகாமல் இருக்க அவர் பர்தா அணிந்து சென்றதும் தெரியவந்தது. திருடிய ஒரு ஸ்கூட்டரை ரோஷினி பயன்படுத்தி வந்ததும், இன்னொரு ஸ்கூட்டரை அடமானம் வைத்து அவர் ரூ.5 ஆயிரம் பெற்றிருப்பதும் தெரியவந்தது. பின்னர், அவர் கொடுத்த தகவலின் பேரில் 2 ஸ்கூட்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story