ஈரோட்டில் ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீர் திட்ட பணிகள் தீவிரம்
ஈரோட்டில் ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீர் திட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை 32 சதவீத பணிகள் நிறைவடைந்ததாக அதிகாரிகள் கூறினார்கள்.
ஈரோடு,
ஈரோடு மாநகராட்சி பகுதிகளுக்கு காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரிக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக ஈரோடு வைராபாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து நீரேற்றம் செய்யப்படுகிறது. காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீரை வினியோகம் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே பவானி அருகே ஊராட்சிக்கோட்டையில் இருந்து குடிநீரை கொண்டு வர திட்டம் தயார் செய்யப்பட்டது.
பல ஆண்டுகளாக இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு வந்தது. பொதுமக்களும் இந்த திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அரசியல் கட்சியினர் சார்பிலும் ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. அனைத்து தேர்தல்களிலும் அரசியல் கட்சியினரின் தேர்தல் அறிக்கையில் ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டம் இடம்பெற்றிருந்தது.
இந்தநிலையில் அம்ரூட் திட்டத்தின் கீழ் ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தை நிறைவேற்ற மொத்தம் ரூ.484 கோடியே 45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் மத்திய அரசு 50 சதவீதமும், தமிழக அரசு 20 சதவீதமும், மாநகராட்சி 30 சதவீதமும் நிதி வழங்கியது.
இதைத்தொடர்ந்து ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது. இதற்காக பெரிய குழாய்கள் ஈரோட்டிற்கு கொண்டு வரப்பட்டன. மேலும், ஈரோடு பவானிரோட்டில் குழாய்கள் பதிக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு பொக்லைன் எந்திரங்கள் மூலம் குழிகள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன.
பவானி அருகே ஊராட்சிக்கோட்டை வரதநல்லூரில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து ஈரோடு மாநகராட்சியின் 60 வார்டுகளுக்கும் குடிநீர் வழங்கப்பட உள்ளது. இந்த பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஒரு நாளில் 118 மில்லியன் லிட்டர் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம் லிட்டர்) தண்ணீர் நீரேற்றம் செய்யப்பட உள்ளது. இதற்காக வரதநல்லூர் காவிரி ஆற்றில் நீர் சேகரிப்பு கிணறு அமைக்கப்படும். அங்கு உயர் திறனுடைய 2 மின் மோட்டார்கள் மூலம் தண்ணீர் நீரேற்றம் செய்து சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்படும். இதன் மூலம் நிமிடத்திற்கு 29 ஆயிரம் லிட்டர் நீரேற்றம் செய்யப்படுகிறது.
இதில் சுத்திகரிப்பு செய்யப்பட்ட தண்ணீர் அதே பகுதியில் அமைக்கப்படும் 52 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டிக்கு அனுப்பப்படும். எனவே வரதநல்லூரில் சுத்திகரிப்பு நிலையம், தரைமட்ட தொட்டி அமைக்கப்படும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
ஊராட்சிக்கோட்டையில் இருந்து ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட சூரியம்பாளையம் மற்றும் வ.உ.சி. பூங்கா பகுதிகளில் கட்டப்படும் தரைமட்ட தொட்டிகளுக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்படும். இதற்காக சூரியம்பாளையத்தில் 42 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியும், வ.உ.சி. பூங்காவில் 118 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியும் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. அங்கிருந்து மற்ற பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளது.
உயரமான பகுதிகளுக்கு குடிநீர் சீராக வினியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக ஈரோடு திண்டல் வித்யா நகர், ஓடைக்காட்டுவலசு, கணபதிநகர் ஆகிய இடங்களில் தரைமட்ட தொட்டிகள் கட்டப்பட்டு, அங்கிருந்து மேடான பகுதிகளுக்கு தண்ணீர் நீரேற்றம் செய்து அனுப்பி வைக்கப்படும்.
ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் ஏற்கனவே உள்ள 46 பழைய மேல்நிலை குடிநீர் தொட்டிகள் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்திற்கு பயன்படுத்தப்பட உள்ளது. மேலும், புதிதாக 21 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டப்பட உள்ளன. சூரியம்பாளையம், வ.உ.சி. பூங்கா ஆகிய இடங்களில் இருந்து மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கும், அங்கிருந்து வீடுகளுக்கும் குடிநீரை கொண்டு செல்ல 731.8 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிதாக குழாய்கள் அமைக்கப்பட உள்ளன.
மேலும், 67.21 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்கனவே உள்ள குடிநீர் இணைப்பு பாதைகள் பயன்படுத்தப்பட உள்ளது.
வருங்காலத்தில் ஈரோடு மாநகராட்சியில் உள்ள மக்கள் தொகையை கணக்கிட்டு விரிவான குடிநீர் திட்டமாக ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதாவது கடந்த ஆண்டு மக்கள் தொகையின் படி மாநகராட்சி பகுதியில் 5 லட்சத்து 35 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். இந்த மக்களுக்கு தினமும் 81.1 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.இதேபோல் 2023-ம் ஆண்டு மக்கள் தொகையை கணக்கிட்டால் சுமார் 7 லட்சம் பேர் இருப்பார்கள். அவர்களுக்கு 114.75 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். மேலும், 2047-ம் ஆண்டு 9 லட்சத்து 5 ஆயிரம் பேர் இருப்பதாக கணக்கிட்டால், 147.69 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படலாம். அதாவது ஒரு நபருக்கு தினமும் 135 லிட்டர் தண்ணீர் வழங்குவதன் அடிப்படையில் திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
அடுத்த ஆண்டு (2019) ஜூன் மாதத்திற்குள் ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டத்தை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. எனவே பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை 32 சதவீத பணிகள் நிறைவடைந்துவிட்டன.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
Related Tags :
Next Story