தொடக்க கூட்டுறவு சங்கங்களின் நிர்வாக குழு உறுப்பினர் தேர்தல் 26-ந்தேதி வேட்புமனு தாக்கல்
தொடக்க கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 26-ந்தேதி நடக்கிறது.
கடலூர்,
தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் 4 கட்டங்களாக நடக்கிறது. இதில் முதல் கட்டமாக தொடக்க கூட்டுறவு சங்கத்தேர்தல் நடக்கிறது. கடலூர் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தொடக்க வேளாண்மை ஊரக வளர்ச்சி வங்கி, நெசவாளர் கூட்டுறவு சங்கம், கூட்டுறவு வீட்டு வசதி சங்கம், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், மீனவர் கூட்டுறவு சங்கம், பெண்கள் கூட்டுறவு சங்கம், தொழில் கூட்டுறவு சங்கம், வேளாண்மை பொறியியல் கூட்டுறவு சங்கம் ஆகிய தொடக்க கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இந்த கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் அந்தந்த கூட்டுறவு சங்க அலுவலகங்களில் வெளியிடப்பட்டது.
இதற்கிடையே தேர்தலை நடத்துவது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் தண்டபாணி தலைமை தாங்கி, தேர்தல் நடத்துவது தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் இளஞ்செல்வி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் கோமதி, சரக துணைப்பதிவாளர்கள், வீட்டு வசதி துறை, பால் வளத்துறை, கைத்தறி, துணிநூல், வேளாண்மை, மீன் வளத்துறை மற்றும் மாவட்ட தொழில் மையம், உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் நிர்வாகக்குழு உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் வருகிற 26-ந்தேதி காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது. 27-ந்தேதி காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வேட்புமனுக்கள் பரிசீலனை நடக்கிறது.
வேட்பு மனு பரிசீலனைக்குப்பின் செல்லத்தக்க வேட்பாளர்களின் பட்டியல் 27-ந்தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது. போட்டியில் இருந்து விலக விரும்புகிறவர்கள் 28-ந்தேதி மாலை 4 மணிக்குள் வேட்புமனுவை வாபஸ் பெறலாம். 28-ந்தேதி மாலை 5 மணிக்கு வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும். போட்டியிருந்தால் அடுத்த மாதம்(ஏப்ரல்) 2-ந்தேதி ஓட்டுப்பதிவு நடக்கும். மறுநாள்(ஏப்ரல் 3-ந்தேதி) காலை 10 மணிக்கு ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story