திருவண்ணாமலையில் அரசு ஊழியர்களின் போராட்டத்தால் போர்க்களமான கலெக்டர் அலுவலகம்
திருவண்ணாமலையில் அரசு ஊழியர்களின் போராட்டத்தால் கலெக்டர் அலுவலகம் போர்க்களமானது. மேலும் கலெக்டரின் கார் முற்றுகை மற்றும் அலுவலக கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமிக்கும், அரசு ஊழியர்களுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. கலெக்டர், ஆய்வு கூட்டத்தில் அரசு ஊழியர்களை கடுமையாக பேசுவதாகவும், களப்பணியின் போது பெண் ஊழியர்களிடம் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே, கலெக்டரை கண்டிக்கும் விதமாக அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம், மக்கள் குறைதீர்வு கூட்டத்தை புறக்கணித்தல் போன்ற பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அரசு ஊழியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில மையம் சார்பில், நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று காலை 150-க்கும் மேற்பட்ட போலீசார் கலெக்டர் அலுவலகம் முன்பு குவிக்கப்பட்டு இருந்தனர். காலை முதல் அரசு ஊழியர்கள் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வரத்தொடங்கினர்.
காலை 11 மணி அளவில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமையில், அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலெக்டர் கந்தசாமியை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். திருவண்ணாமலை உதவி போலீஸ் சூப்பிரண்டு ரவாளிபிரியா தலைமையில், போலீசார் கலெக்டர் அலுவலக ஆர்ச் அருகே பேரிகார்டுகளை அமைத்து அரண்போல் நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கும் போது கலெக்டர் கந்தசாமி தனது வீட்டில் இருந்து ஆர்ச் வழியாக தனது அலுவலகத்திற்கு நடந்து சென்றார். அப்போது அரசு ஊழியர்கள் அதிக சத்தத்துடன் கோஷங்களை எழுப்பினர். நேரம் செல்ல செல்ல அரசு ஊழியர்களின் எண்ணிக்கை அதிகமானது. இதையடுத்து கலெக்டர் கந்தசாமி பகல் 12.30 மணி அளவில் களப்பணி மேற்கொள்ள அலுவலகத்தில் இருந்து காரில் வெளியே வந்தார்.
ஆர்ச் நுழைவு வாயிலை திறந்தவுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென கலெக்டர் காரை முற்றுகையிட்டனர். காரின் முன்னே நின்று அரசு ஊழியர்கள் காரை நகர விடாமல் தள்ளினர். சிலர் காரை தூக்க முயன்றனர். போலீசார் அவர்களை விலக்கி காருக்கு வழிவிட போராடினர். எனினும் போலீசாரால் அவர்களை தடுக்க முடியவில்லை. அப்போது அரசு ஊழியர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் காரை, அரசு ஊழியர்கள் சூழ்ந்துகொண்டனர். இதனால் கலெக்டர் கந்தசாமி காரில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவருக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதற்கிடையில் அவரின் கார் கூட்டத்தில் இருந்து சாலைக்கு சென்றது. பின்னர் கலெக்டர் அருகில் இருந்த மாற்றுவழியில் நடந்து சென்று காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் ஆத்திரமடைந்த அரசு ஊழியர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து உதவி போலீஸ் சூப்பிரண்டு ரவாளிபிரியா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரங்கராஜன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் வெகுண்டெழுந்த அரசு ஊழியர்கள் பேரிகார்டுகளை தள்ளி கலெக்டர் அலுவலகம் உள்ளே செல்ல முயன்றனர்.
அப்போது போலீசார் அரண்போல் நின்று தடுத்தனர். எனினும் அரசு ஊழியர்கள் அதிகமாக இருந்ததால் அவர்களால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. ஒரு கட்டத்தில் பேரிகார்டுகளை அரசு ஊழியர்கள் தூக்கி எறிந்தனர். இதனால் அந்த இடமே போர்களம் போல் காட்சி அளித்தது.
அதைத் தொடர்ந்து போலீசாரை தள்ளிவிட்டு அரசு ஊழியர்கள் முன்னேறிச் சென்றனர். இதையடுத்து நுழைவு வாயில் இரும்பு கதவு மூடப்பட்டது. கதவிற்கு உள்புறம் போலீசார் தாழ்பாள் போட்டு கதவின் அருகே நின்று கதவை தாங்கி பிடித்தவாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஒருபுறம் பேரிகார்டுகள் சிதற, மறுபுறம் நுழைவு கதவை அரசு ஊழியர்கள் தள்ள, மற்றொருபுறம் கலெக்டருக்கு எதிராக கோஷங்கள் எழ அடுத்தடுத்த நொடிகள் கலெக்டர் அலுவலகம் பரபரப்பின் உச்சிக்கே சென்றது. அரசு ஊழியர்கள் கதவை தள்ளியதால் கதவின் தாழ்பாள் உடைந்தது. கதவு திறக்கப்பட்ட உடன் மடைதிறந்த வெள்ளம் போல அரசு ஊழியர்கள் போலீசாரின் கூட்டத்தின் நடுவே நாலாபுறமும் பிரிந்து கலெக்டர் அலுவலகம் உள்ளே ஓடினர். பின்னால் போலீசாரும் அவர்களை கட்டுப்படுத்த ஓடினர்.
கலெக்டர் அறை உள்ள ஒருங்கிணைந்த கட்டிடத்திற்குள் அரசு ஊழியர்கள் ஓடினர். அங்கு அவர்கள் முதல் தளத்தில் உள்ள கலெக்டரின் அறைக்கு சென்று தரையில் அமர்ந்து தர்ணா செய்தனர்.
இதற்கிடையில் அந்த கட்டிடத்தில் ஆதார் எண்ணிற்கு புகைப்படம் எடுக்கும் அறையின் கண்ணாடி உடைக்கப்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முடியாததால் அந்த கட்டிடத்தின் கதவு பூட்டப்பட்டது. உள்ளே கலெக்டர் அறையை திறக்க அரசு ஊழியர்கள் முயன்றனர்.
போலீசார் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். வெளியே நின்றிருந்த அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டு போலீஸ் வேன், அரசு பஸ்களில் ஏற்றப்பட்டனர். என்ன செய்வதென்று தெரியாமல் போலீசார் திகைத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி வந்து கலெக்டர் அறை அருகே தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். கலெக்டரிடம் தெரிவித்து பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து தரப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வெளியே வந்த அவர்கள் அக்கட்டிட போர்டிகோ கீழ் அமர்ந்து மீண்டும் தர்ணாவில் ஈடுபட்டனர். இந்த நிலையில் டி.ஐ.ஜி. வனிதா போராட்டத்தை பார்வையிட்டார். தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் மாலைக்குள் கலெக்டருடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக போலீசார் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர்.
அரசு ஊழியர்களின் தொடர் போராட்டம் காரணமாக அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க கலெக்டர் அலுவலகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story