பட்டிவீரன்பட்டி அருகே 2 குளங்களில் வண்டல் மண் அள்ள அனுமதி


பட்டிவீரன்பட்டி அருகே 2 குளங்களில் வண்டல் மண் அள்ள அனுமதி
x
தினத்தந்தி 22 March 2018 10:00 PM GMT (Updated: 22 March 2018 6:12 PM GMT)

பட்டிவீரன்பட்டி அருகே 2 குளங்களில் வண்டல் மண் அள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பட்டிவீரன்பட்டி,

பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையம் கிராமத்துக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 120 ஏக்கர் பரப்பளவு கொண்ட தாமரைக்குளம் உள்ளது. இந்த பகுதியில் மிகப்பெரிய குளம் ஆகும். இந்த குளத்துக்கு மருதாநதி அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் வருகிறது. இதுதவிர காட்டாற்று ஓடைகள் மூலமும் குளத்தில் தண்ணீர் தேங்குகிறது.

பல ஆண்டுகாலமாக தாமரைக்குளம் தூர்வாரப்படாததால் புதர் மண்டிக்கிடந்தது. மேலும் வண்டல் மண் மேவி கிடப்பதால் குளத்தின் நீர்ப் பிடிப்பு பகுதி குறைந்து கொண்டே வருகிறது. இதேபோல் இந்த குளத்தை ஒட்டியுள்ள சித்தரேவு, கருங்குளம், சொட்டாங்குளம், ரெங்கசமுத்திரம் போன்ற குளங்களிலும் இதே நிலைதான் நீடிக்கின்றது.

இதையடுத்து இந்த குளங்களை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினயிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மாவட்ட கலெக்டர் நேரில் குளங்களை பார்வையிட்டார். மேலும் அந்த குளங்களை உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

குளங்களை தூர்வாரும் பொருட்டு வண்டல் அள்ளிக் கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக நிலத்தின் சிட்டா அடங்கல்சிட்டா மற்றும் மனுவுடன் ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்து அனுமதி கடிதம் பெற வலியுறுத்தப்பட்டது. அதன்படி ஏராளமான விவசாயிகள் வண்டல் அள்ள விண்ணப்பம் செய்தனர்.

அதன்படி முதற்கட்டமாக தாமரைக்குளம், கருங்குளம் ஆகியவற்றில் வண்டல் மண் அள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் ஆர்.டி.ஓ. (பொறுப்பு) ஜான்சன் மண் அள்ளுவதை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், ஆத்தூர் தாசில்தார் ராஜகோபால், மண்டல துணை தாசில்தார் சரவணகுமார், ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயச்சந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன், வருவாய் ஆய்வாளர் அமுதா, ஊராட்சி செயலாளர்கள் சிவராஜன், கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குளங்களில் வண்டல் மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, கதிர்நாயக்கன்பட்டி போன்ற பகுதியை சேர்ந்த விவசாயிகள் 100-க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் வண்டல் மண்னை அள்ளி வருகின்றனர்.

Next Story