போதிய பஸ் வசதி இல்லை: சரக்கு வாகனங்களில் சென்று தேர்வு எழுதும் மாணவர்கள்
எஸ்.புதூர் அருகே பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நீண்ட தொலைவில் மையம் இருப்பதாலும், பஸ் வசதி இல்லாததாலும் சரக்கு வாகனங்களில் சென்று வருகின்றனர்.
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் அருகே புழுதிபட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 10-ம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மையமாக இருந்தது. இந்த கல்வி ஆண்டு முதல் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மையமாக அறிவிக்கப்பட்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த தேர்வு மையத்தில் புழுதிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, கரிசல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் முசுண்டபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள், வலசைபட்டி உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். கடந்த கல்வி ஆண்டில் புழுதிபட்டி அரசுப்பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவ-மாணவிகள் 25 கி.மீ. தூரமுள்ள சிங்கம்புணரிக்கு சென்று தேர்வு எழுதினர். பின்னர் பெற்றோர் கோரிக்கைகளுக்கு பின்னர் புழுதிபட்டியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் முசுண்டபட்டி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு பள்ளிகளில் தேர்வு எழுதிவருகின்றனர். எஸ்.புதூர், சிங்கம்புணரி பள்ளிகளில் தேர்வு எழுதிய மாணவர்கள், இந்த ஆண்டு புழுதிபட்டி மையத்தில் எழுதுகின்றனர். புழுதிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையமானது கரிசல்பட்டியிலிருந்து 10 கி.மீ தூரத்திலும், வலசைபட்டியில் இருந்து 12 கி.மீ தூரத்திலும், முசுண்டபட்டியில் இருந்து 15 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. ஆனால் மாணவர்கள் தேர்வு மையத்திற்கு செல்வதற்கு போதிய பஸ் வசதி கிடையாது. இதனால் கரிசல்பட்டி, வலசைபட்டி மற்றும் முசுண்டபட்டி பள்ளியில் இருந்து தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் சரக்கு வாகனத்தில் பயணித்து தேர்வு எழுதி வருகின்றனர். இதனால் தங்களது குழந்தைகளை தேர்வு எழுத அனுப்பிவிட்டு, தேர்வு முடிந்து வரும் வரை பெற்றோர் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். எனவே அடுத்த கல்வி ஆண்டு முதல் அருகில் உள்ள பள்ளியில் நிரந்தர புதிய தேர்வு மையம் அமைத்து தரவேண்டும் என்றும், அதுவரையிலும் இந்த ஆண்டு மீதி தேர்வை எழுதுவதற்காக பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Related Tags :
Next Story