பொது சுகாதார வளாகங்களை மகளிர் சுயஉதவி குழுவினர் பராமரிக்க வேண்டும் கலெக்டர் சிவஞானம் அறிவுறுத்தல்


பொது சுகாதார வளாகங்களை மகளிர் சுயஉதவி குழுவினர் பராமரிக்க வேண்டும் கலெக்டர் சிவஞானம் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 23 March 2018 3:30 AM IST (Updated: 23 March 2018 12:41 AM IST)
t-max-icont-min-icon

பொது சுகாதார வளாகங்களை மகளிர் சுய உதவி குழுவினர் பராமரிக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

விருதுநகர், 

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா அழகியநல்லூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. முகாமில், மனுக்களை பெற்றுக்கொண்டதோடு 342 பேருக்கு ரூ.20 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். முகாமில் அவர் பேசியதாவது:-

மாவட்டத்தில் இதுவரை 80 ஆயிரத்து 792 தனிநபர் இல்ல கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. 131 ஊராட்சிகள் திறந்தவெளி கழிப்பிடமில்லாத ஊராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. 319 ஊராட்சிகளில் 42 ஆயிரத்து 324 தனிநபர் இல்ல கழிப்பறை கட்டுவதற்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் தனிநபர் இல்ல கழிப்பறை, சமுதாய கழிப்பறை, ஆண்கள் மற்றும் மகளிர் சுகாதார வளாகங்களை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கும், மகளிர் சுயஉதவி குழுக்களில் உள்ள பெண்கள் மூலமாக மக்களிடம் மனமாற்றம் ஏற்படுத்தி அவர்களின் பழக்கவழக்கங்களில் மாற்றம் கொண்டுவருவதற்கும், பழுதடைந்த பொது சுகாதார வளாகங்களை சீர்செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். எனவே மகளிர் சுயஉதவி குழுக்களில் உள்ள பெண்கள் தங்களது கிராமங்களில் உள்ள சுகாதார வளாகங்களை தாங்களே பொறுப்பெடுத்து பராமரித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு முன்வர வேண்டும். உறிஞ்சு குழி முறையை பயன்படுத்தி மனித கழிவுகளை உரமாக மாற்றி நிலத்திற்கு பயன்படுத்த வேண்டும். திடக்கழிவு மேலாண்மை மூலம் மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை தரம் பிரித்து, மக்கும் குப்பைகளை உரமாக மாற்றி மக்காத குப்பைகள் விற்பனை செய்து சுற்றுச்சுழல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்தகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சுரேஷ், அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் பிரேம்குமார், கால்நடை பராமரிப்புதுறை இணை இயக்குனர் ஜெகதீசன், உதவி ஆணையர்(கலால்) சங்கரநாராயணன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பார்த்திபன், காரியாபட்டி தாசில்தார் முத்துகிருஷ்ணன் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக கலெக்டர் உள்பட அனைவரும் அரசு பஸ்சில் வந்து முகாமில் பங்கேற்றனர்.

Next Story