ரெயில் நிலையம் அருகே 5 வீடுகளை சூறையாடியவர்கள் மீது வழக்கு


ரெயில் நிலையம் அருகே 5 வீடுகளை சூறையாடியவர்கள் மீது வழக்கு
x
தினத்தந்தி 23 March 2018 4:00 AM IST (Updated: 23 March 2018 12:43 AM IST)
t-max-icont-min-icon

ஆரம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே 5 வீடுகளை சூறையாடியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் ரெயில்நிலையம் அருகே உள்ளது செல்லியம்மன் கோவில். இந்த கோவிலின் குளத்தை சுற்றி உள்ள செல்லியம்மன் நகரில் சுமார் 35 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். செல்லியம்மன் நகர் என்பது கோவிலுக்கு பொதுவான இடம் என்றும், திருவிழா மற்றும் கோவில் பயன்பாட்டிற்காக அந்த இடம் தேவைப்படுவதாக கிராம முக்கியஸ்தர்கள் அந்த பகுதி மக்களிடம் ஏற்கனவே தெரிவித்து உள்ளனர். மேலும் மேற்கண்ட இடத்தில் உள்ள குடியிருப்புகளை காலி செய்து தரும்படி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதனையடுத்து 35 குடும்பத்தினர் தங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு தரப்பில் தங்களுக்கு மாற்று இடம் ஒதுக்கி தரும்படி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மற்றும் கும்மிடிப்பூண்டி தாசில்தாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இந்த நிலையில் இந்த பகுதியில் வசித்து வரும் லாரி டிரைவர் சங்கர் என்பவரின் மனைவி சத்யாவிற்கும், அதே பகுதியை சேர்ந்த ஷேக்முகமது என்பவருக்கும் இடையே இருந்து வந்த கள்ளகாதல் விவகாரத்தால் பிரச்சினை ஏற்பட்டது. இதனையடுத்து லாரி டிரைவர் சங்கர், ஷேக்முகமதுவின் மனைவி ஷகிலாவை அரிவாளால் வெட்டி அவரது கைகளை துண்டித்தார்.

இது போன்ற பிரச்சினைகள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறி ஆரம்பாக்கம், அரும்பாக்கம், எம்.ஆர்்.கண்டிகை செட்டித்தெரு, நொச்சிக்குப்பம், பாட்டைகுப்பம் மற்றும் கல்லேரிமேடு ஆகிய 7 கிராமங்களை சேர்ந்த சிலர் அரும்பாக்கத்தை சேர்ந்த தசரதன், திருவெற்றியூரை சேர்ந்த சீனு ஆகியோர் தலைமையில் நேற்று முன்தினம் மேற்கண்ட குடியிருப்பு பகுதியில் சாவித்திரி, சந்தியா, சங்கர், மீனா, லலிதா ஆகிய 5 பேரின் வீடுகளுக்கள் அத்துமீறி புகுந்து பொருட்களை உடைத்து வீடுகளையும், அங்குள்ள கடைகளையும், மோட்டார் சைக்கிள்களையும் சேதப்படுத்தி சூறையாடியதாக கூறப்படுகிறது.

இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார், வீடுகளை சேதப்படுத்தி சூறையாடியதாக சீனு, தசரதன் உள்பட சிலர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

Next Story