ஆண்டாள் கோவில் திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் 30-ந்தேதி நடைபெறுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருக்கல்யாண திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முத்து பட்டரின் மகன் பிரசன்னா பட்டர் கோவில் கொடிமரத்தில் கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து அபிஷேக, தீப ஆராதனைகள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் நாகராஜன், வானமாமலை ஜீயர், சடகோப ராமனுஜ ஜீயர், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் கோவில் பட்டர்கள் அனந்தராமகிருஷ்ணன், முத்து பட்டர், கதர்சன், ரமேஷ் பட்டர் உள்பட அனைத்து பட்டர்களும் திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர்.
கொடியேற்றத்தினை தொடர்ந்து தினமும் ஆண்டாள், ரெங்கமன்னார் பல்வேறு வாகனங்களில் காலை, இரவு வேளைகளில் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண திருவிழா 30-ந் தேதி(வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை செப்புத் தேரோட்டம் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு கோவில் முன்பு அமைந்துள்ள பிரமாண்டமான மண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
திருக்கல்யாணத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், ஊழியர்களும் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story