மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் வெண்ணெய்த்தாழி உற்சவம்


மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் வெண்ணெய்த்தாழி உற்சவம்
x
தினத்தந்தி 23 March 2018 4:15 AM IST (Updated: 23 March 2018 2:25 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் வெண்ணெய்த்தாழி உற்சவம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜ கோபாலசாமி கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் மூலவராக பரவாசுதேவ பெருமாளும், உற்சவராக ருக்மணி, சத்யபாமாவுடன் ராஜகோபால சாமியும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். தாயார் சன்னதியில் மூலவராக செண்பகலட்சுமி தாயாரும், உற்சவராக செங்கமலத்தாயாரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பிரம்மோற்சவம் 18 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். பிரம்மோற்சவத்தை தொடர்ந்து 12 நாட்கள் விடையாற்றி உற்சவம் நடைபெறும். ஆகவே பங்குனி மாதம் முழுவதும் ராஜகோபாலசாமி கோவில் விழாக்கோலம் பூண்டிருக்கும்.

இந்த ஆண்டுக்கான பங்குனி பிரம்மோற்சவம் கடந்த 7-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் ராஜகோபாலசாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வெண்ணெய்த்தாழி உற்சவம் நேற்று நடந்தது. உற்சவத்தின் தொடக்கமாக ராஜகோபாலசாமி தவழும் குழந்தையாக கையில் வெள்ளி வெண்ணெய் குடத்துடன் கண்ணன் திருக்கோலத்தில் கோவிலில் இருந்து பல்லக்கில் காலை 7.30 மணிக்கு புறப்பட்டார். பல்லக்கு ராஜகோபுரம், வெளி கோபுரம், அகோபிலை மடம், வானமாமலை மடம், கருடஸ்தம்பம், கோபாலசமுத்திரம் கிழக்கு வீதி, தெற்கு வீதி, மேற்கு வீதி, வடக்கு வீதி வழியாக உலா வந்தது. பின்னர் மேலராஜவீதி, காமராஜர் வீதி, பெரியகடைத்தெரு, பந்தலடி, காந்தி சாலை வழியாக வெண்ணெய்த்தாழி மண்டபத்தை அடைந்தது.

பல்லக்கு வந்த வழியெங்கும் திரண்டிருந்த திரளான பக்தர்கள் கண்ணணுக்கு பிடித்தமான வெண்ணெய்யை பல்லக்கில் குழந்தையாக வீற்றிருந்த ராஜகோபாலசாமி மீது தெளித்தனர்.

கர்நாடகா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்கள் மற்றும் திருவாரூர், தஞ்சை, நாகை மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் உற்சவத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ராஜகோபாலசாமி வீதி உலாவின்போது நூற்றுக்கணக்கான வேத விற்பன்னர்கள், நாலாயிர திவ்ய பிரபந்தங்களை பாடியபடி சென்றனர்.

உற்சவத்தையொட்டி அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் பக்தர்களுக்கு மோர், குளிர்பானங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாலை 3 மணிக்கு வெண்ணெய்த்தாழி மண்டபத்தில் செட்டி அலங்காரத்தில் ராஜகோபாலசாமி பக்தர்களுக்கு தரிசனம் தந்தார்.

அதைத்தொடர்ந்து ராஜகோபாலசாமி வெட்டுங்குதிரை வாகனத்தில் ராஜ அலங்காரத்துடன் வெண்ணெய்த்தாழி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு பந்தலடி சென்றார். அப்போது பந்தலடி அருகே வாணவேடிக்கை நடந்தது. பின்னர் கோவிலை சென்றடைந்தார். பங்குனி பிரம்மோற்சவத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) தேரோட்டமும், தீர்த்த வாரியும் நடக்கிறது.

Next Story