ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 23 March 2018 4:15 AM IST (Updated: 23 March 2018 2:26 AM IST)
t-max-icont-min-icon

கறம்பக்குடி அருகே புதுப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள பல்லவராயன்பத்தை, இலைகடிவிடுதி ஊராட்சிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிகளின் மையப்பகுதியில் உள்ள புதுப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில், கடந்த 2014-ம் ஆண்டு கறம்பக்குடியில் செயல்பட்டு வந்த ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.

புதுப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டு இருந்தது. இதற்காக புதுப்பட்டி கிராமத்தில் இடமும் தேர்வு செய்யப்பட்டது. இந்த நிலையில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற்றதால் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது. அப்பகுதி பொதுமக்கள், அனைத்து அரசியல் கட்சியினர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் ஆரம்ப சுகாதார நிலைய பணிகள் குறித்து அரசு அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில், புதுப்பட்டியில் அமைக்கப்பட இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை கந்தர்வகோட்டை தொகுதிக்கு உட்பட்ட குளந்திரான்பட்டியில் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பல்லவராயன்பத்தை, இலைகடிவிடுதி ஊராட்சி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் நேற்று காலை சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதனால் புதுப்பட்டி பகுதியில் ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிண்ை-டு அப்துல் முத்தலிபு தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

நேற்று காலை 8 மணிக்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் புதுப்பட்டியில் குவிந்தனர். பின்னர், கறம்பக்குடி-புதுக்கோட்டை பிரதான சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் கறம்பக்குடி தாசில்தார் சக்திவேல், ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல்முத்தலிபு மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதற்கு மறியலில் ஈடுபட்டவர்கள், மாவட்ட கலெக்டர் வந்து ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும் என உறுதி தந்தால்தான் மறியலை கைவிடுவோம் என்றனர். இதனால் சாலையின் இருபுறமும் பஸ்கள், லாரிகள், இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதுகுறித்து தகவல் அறிந்த சுகாதார பணிகள் அறந்தாங்கி துணை இயக்குனர் கலைவாணி சம்பவ இடத்திற்கு வந்து, கலெக்டர் வேறு பணியில் இருப்பதாகவும் வருகிற 27-ந் தேதி உதவி கலெக்டர் தலைமையில் கூட்டம் நடத்தி உரிய தீர்வு காணப்படும் என கூறினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story