கோவை மண்டலத்தில் வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை உயரும் : கமிஷனர் தகவல்


கோவை மண்டலத்தில் வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை உயரும் : கமிஷனர் தகவல்
x
தினத்தந்தி 23 March 2018 4:45 AM IST (Updated: 23 March 2018 2:41 AM IST)
t-max-icont-min-icon

வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 1½ லட்சமாக உயரும் என்று வருமானவரித்துறை கமிஷனர் கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.

கோவை,

கோவை மண்டலத்தில் வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 1½ லட்சமாக உயரும் என்று வருமானவரித்துறை கமிஷனர் கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.

கோவை மண்டல வருமானவரித்துறை தலைமை கமிஷனர் டி.பி.கிருஷ்ணகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோவை மண்டலத்துக்கு உட்பட்ட கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நடப்பாண்டில் இதுவரை மொத்தம் 82,899 பேர் வருமானவரி கணக்குகளை தாக்கல் செய்துள்ளனர். தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு முயற்சிகளின் விளைவாக இந்த எண்ணிக்கை இந்த மாத இறுதிக்குள் 1½ லட்சமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வருமானவரிச்சட்டப்படி, ஒருவரது ஆண்டு வருமானம் அடிப்படை வருமானவரி விலக்கு வரம்பான ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேல் இருந்தால் அவர் வருமானவரி தாக்கல் செய்ய வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இந்த தொகை ரூ.3 லட்சம் வரம்பு, 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு இந்த தொகை ரூ.5 லட்சம் வரம்பு என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கம்பெனிகள், நிறுவனங்கள், நபர்களின் கூட்டமைப்பு, சங்கங்கள், கூட்டுறவு சங்கங்கள் போன்ற அமைப்புகள் அவைகளின் வருமானம் என்னவாக இருந்தாலும் (லாபம், நஷ்டம்) வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கையை உயர்த்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

கோவை மண்டலத்தில் உள்ள வணிகர் சங்கங்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. வருமானவரி தாக்கல் செய்வது தொடர்பான நோட்டீசுகளும் வினியோகிக்கப்பட்டுள்ளன.

முந்தைய ஆண்டுகளில் வருமானவரி தாக்கல் செய்து, தற்போது கணக்கு தாக்கல் செய்யாதவர்கள், வருமான வரி தாக்கல் செய்யாத புதிய நிறுவனங்கள், கம்பெனிகள், கூட்டுறவு சங்கங்கள் என ஏறத்தாழ 55 ஆயிரம் பேருக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, டெபாசிட் செய்யப்பட்ட தகவல்களையும் சேர்த்து, வருமானவரித்துறை வசம் உள்ள பல்வேறு தகவல்களின் அடிப்படையில் வருமானவரி கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் அடையாளம் காணப்பட்டு நோட்டீசுகள் அனுப்பப்படுகின்றன.

கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் செலுத்தப்பட்ட பணத்திற்கான மூலதனம் மற்றும் அந்த நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட பணத்திற்கான மூலதனம் மற்றும் வட்டி தொடர்பான தகவல்களும் ஆராயப்பட்டு வருகின்றன. அதிகபட்ச நடவடிக்கையாக சிலருடைய கணக்குகள் தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.வரி செலுத்துபவர்கள், வருமானவரித்துறையின் நடவடிக்கையை தவிர்க்க, வருமானவரி கணக் கை கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும். இதுதொடர்பான சந்தேகங்களுக்கு வருமானவரித்துறை அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story