தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் மோசடி நடந்ததாக புகார்: விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை


தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் மோசடி நடந்ததாக புகார்: விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 23 March 2018 3:30 AM IST (Updated: 23 March 2018 4:41 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் மோசடி நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.

விழுப்புரம், 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்ட அலுவலகத்தின் கீழ் விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய 6 மண்டல அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகங்களில் சுமார் 25 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களில் ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய வருங்கால வைப்புநிதி தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கக்கோரி ஓய்வு பெற்ற தொழிலாளர்களும், அவர்களுக்கு ஆதரவாக போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினரும் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதன் விளைவாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக அரசு ரூ.2 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கியது. இந்த நிதியின் மூலம் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதியம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகத்திற்குட்பட்ட 6 மண்டல அலுவலகங்களிலும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு புகார்கள் சென்றன.

இதையடுத்து சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி நேற்று காலை 11.45 மணியளவில் விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்திற்கு விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு தேவநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர் லட்சுமி, ஏட்டுகள் விஜயதாஸ், பாலமுருகன், மூர்த்தி உள்ளிட்ட 7 பேர் கொண்ட போலீசார் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இவர்கள் அரசு போக்குவரத்து கழகத்தில் இயங்கி வரும் வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதிய பிரிவு அலுவலகத்திற்கு சென்று அந்த அறையின் கதவுகளை பூட்டிக்கொண்டு அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனை மதிய உணவு இடைவேளையையும் கடந்து நீடித்தது. தொடர்ந்து நடந்த இந்த சோதனை மாலை 3 மணிக்கு முடிவடைந்தது. இந்த சோதனையின் முடிவில், முக்கிய ஆவணங்கள் பலவற்றை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவத்தால் விழுப்புரத்தில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story