மாவட்ட கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை-போலி வெடி குண்டுகளுடன் ஊடுருவிய 9 பேர் பிடிபட்டனர்


மாவட்ட கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை-போலி வெடி குண்டுகளுடன் ஊடுருவிய 9 பேர் பிடிபட்டனர்
x
தினத்தந்தி 23 March 2018 5:37 AM IST (Updated: 23 March 2018 5:37 AM IST)
t-max-icont-min-icon

பாதுகாப்பு ஒத்திகையின் போது போலி வெடி குண்டுகளுடன் ஊடுருவிய 9 பேர் பிடிபட்டனர்.

கடலூர் முதுநகர்,

கடலூர் மாவட்ட கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை நேற்று நடந்தது. அப்போது போலி வெடிகுண்டுகளுடன் ஊடுருவிய 9 பேரை போலீசார் பிடித்தனர்.

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு கடல் வழியாக ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 150-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த சம்பவத்துக்கு பின்னர் கடலோர பகுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் 6 மாதங்களுக்கு ஒருமுறை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. அப்போது கடற்படை, கடலோர காவல்படை மற்றும் கமாண்டோ படையினர் பயங்கரவாதிகள் போல் போலி வெடிகுண்டுகளுடன் கடல், தரை வழி மற்றும் வாகனங்கள் மூலம் ஊடுருவுவார் கள். அவர்களை, அந்த பகுதிக்குட்பட்ட கடலோர காவல்படை மற்றும் உள்ளூர் போலீசார் கண்டுபிடிப்பார்கள்.

அதன்படி தமிழகத்தின் கிழக்கு கடலோர பகுதிகளில் கடற்கவசம் எனப்படும் ‘சாகர் கவாச்’ என்ற பாதுகாப்பு ஒத்திகை நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கியது. இதையொட்டி கடலோர பகுதிகளில் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். கடலூர் மாவட்டத்தில் கடற்கரை பகுதியான நல்லவாடு முதல் கிள்ளை வரை உள்ள 64 மீனவ கிராமங்கள் மற்றும் சிதம்பரம் நடராஜர் கோவில், பஸ் நிலையங்கள், முக்கிய ரெயில் நிலையங்களில் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுப்பதற்காக 200-க்கும் அதிகமான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கடலோர கிராமங்களில் மர்ம நபர்களின் நடமாட்டம் இருந்தால் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு மீனவர்களுக்கும் அறிவுறுத்தி இருந்தனர்.

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மேற்பார்வையில் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையிலான போலீசார் கடலூர் துறைமுகத்தில் இருந்து படகு மூலம் கடற்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு படகில் சந்தேகப்படும்படியாக 3 பேர் வந்தனர். அந்த படகை போலீசார் சுற்றி வளைத்து சோதனையிட்டனர். அப்போது அந்த படகில் ஒரு போலி வெடிகுண்டு இருந்ததை கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர்.

படகில் வந்த 3 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் தமிழ்நாடு அதிவிரைவுப்படையைச்சேர்ந்த குமார், கடற்படையை சேர்ந்த சிவகோபால், அனிமேஷ்சர்மா ஆகியோர் என்பதும், அவர்கள் பயங்கரவாதிகள் போல் மாறுவேடத்தில் கரிக்குப்பம் தனியார் மின் நிறுவனத்தை தகர்ப்பதற்காக போலி வெடிகுண்டுடன் வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் பிடித்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

இதேபோல் கடலூர் முது நகர் பழைய போலீஸ் நிலைய பஸ் நிறுத்தம் அருகில் போலி வெடிகுண்டுடன் நின்ற கடற்படையை சேர்ந்த கவுரவ்குமார், தமிழ்நாடு அதிவிரைவுப்படை பாலாஜி ஆகிய 2 பேரை பிடித்து, அவர்களிடம் இருந்த போலி வெடிகுண்டை பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையே கடலூர் துறைமுகம் அடுத்த சோனங்குப்பம் கடற்கரையில் நின்ற 4 பேரை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கடற்படை வீரர்களான சுமன்கவுஸ், தேவேஷ்குமார், கடலோர காவல்படை லக்விந்தர்சிங், தமிழ்நாடு அதிவிரைவுப்படை ஸ்ரீதர் ஆகிய 4 பேர் என்பதும், முதுநகரில் உள்ள சுங்க அலுவலகத்துக்குள் புகுந்து நாசவேலையில் ஈடுபட முயன்றதும் தெரிந்தது. உடனே போலீசார், அவர்கள் 4 பேரையும் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து பாதுகாப்பு ஒத்திகையையொட்டி போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு படை போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Next Story