காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் தரையில் படுத்து போராட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் தரையில் படுத்து போராட்டம்
x
தினத்தந்தி 23 March 2018 11:00 PM GMT (Updated: 23 March 2018 7:35 PM GMT)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் தரையில் படுத்து போராட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் தரையில் படுத்து போராட்டம் நடத்தினர்.

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பே தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணைத் தலைவர் கக்கரை சுகுமாரன், தெற்கு மாவட்ட தி.மு.க. விவசாய அணி துணை அமைப்பாளர் கோவிந்தராஜ், நசுவினி ஆறு படுகை அணை விவசாயிகள் மேம்பாட்டு சங்க தலைவர் வீரசேரன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஜெயபால் உள்பட 10 பேர் கூட்ட அறையில் அதிகாரிகள் அமரும் இருக்கைக்கு எதிரே பச்சை துண்டை தரையில் விரித்து படுத்து நூதன போராட்டத்தை நடத்தினர். காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும். இதற்காக தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

அப்போது கூட்டத்தை நடத்துவதற்காக மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஏகாம் பரம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜஸ்டின் மற்றும் அதிகாரிகள் கூட்ட அறைக்கு வந்தனர். அவர்கள், விவசாயிகளிடம் சமசர பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதை ஏற்காமல் விவசாயிகள் தரையில் படுத்திருந்தனர்.

உடனே கூட்ட அறைக்கு போலீசார் அழைக்கப்பட்டனர். வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு வந்து தரையில் படுத்திருந்த விவசாயிகளை எழுந்திருக்கும்படி கூறினர். இதை ஏற்காமல் விவசாயிகள் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து விவசாயிகளை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி, வலுக்கட்டாயமாக கூட்ட அறையில் இருந்து வெளியே கொண்டு வந்து விட்டனர்.

பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் பல்வேறு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

போராட்டம் குறித்து தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணைத் தலைவர் கக்கரை சுகுமாரன் நிருபர்களிடம் கூறிய தாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இந்த கோரிக்கையை வலியுறுத்தி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினால் மட்டும் போதாது. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். எங்களுக்கு தண்ணீர் தேவை.

வருகிற 30-ந் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் போராட்டம் தீவிரமாகும். கூட்டுறவு வங்கி மற்றும் தேசிய வங்கிகளில் அடகு வைத்த நகைகளை ஏலம் விடுவதை நிறுத்த வேண்டும். விஜய்மல்லையாவுக்கு ரூ.9 ஆயிரம் கோடியும், நிரவ்மோடிக்கு ரூ.12 ஆயிரம் கோடியும் வழங்கி அவர்களை வெளிநாட்டிற்கு தப்பிக்கவிட்டு விட்டு, ஏழை விவசாயிகள் பெற்ற கடனுக்காக வீட்டையும், நிலத்தையும் ஏலம் விடும் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.Next Story