அணைக்கட்டு அருகே ஏரிக்கரையை உடைத்து ஆக்கிரமிப்பு


அணைக்கட்டு அருகே ஏரிக்கரையை உடைத்து ஆக்கிரமிப்பு
x
தினத்தந்தி 24 March 2018 2:34 AM IST (Updated: 24 March 2018 2:34 AM IST)
t-max-icont-min-icon

அணைக்கட்டு அருகே ஏரிக்கரையை உடைத்து ஆக்கிரமிப்பில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அணைக்கட்டு,

அணைக்கட்டை அடுத்து ஊணை வாணியம்பாடி ஊராட்சியில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரிபாசனத்தை நம்பி சுற்றுப்புற பகுதியை சேர்ந்த விவசாயிகள், விவசாய நிலங்களில் நெல், கேழ்வரகு மற்றும் கரும்பு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஏரியின் உள் பகுதியில் ஒரு சில விவசாயிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். நாராயணபுரம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி ஒருவர் ஏரிக்கரையை உடைத்து நிலமாக மாற்றி ஆக்கிரமிப்பு செய்து வருகிறார். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கேட்டதற்கு பதில் கூறாமல் தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் ஏரிக்கரையை உடைத்து வருகிறார்.

ஏரிக்கரையை உடைத்து நிலமாக மாற்றுவதால் மழைக்காலங்களில் ஏரிக்கு வரும் மழைநீர் ஏரியில் தேங்காமல் கரையோரங்களில் இருக்கும் விவசாய நிலம் மற்றும் பம்பு செட் கிணறுகளில் வெள்ளம் பாய்ந்து நிலங்கள் சேதம் ஆகும். மேலும் நிலங்களில் உள்ள விவசாய கிணறுகள் தூர்ந்து போகும் அபாயம் உள்ளது. எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் அணைக்கட்டு தாசில்தார் நேரடியாக ஏரிக்கரையை ஆய்வு செய்து உடைக்கப்பட்ட ஏரிக்கரையை மீண்டும் பலப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story