‘ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்யப்படுவதில்லை’ விவசாயிகள் குற்றச்சாட்டு


‘ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்யப்படுவதில்லை’ விவசாயிகள் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 23 March 2018 9:45 PM GMT (Updated: 23 March 2018 9:15 PM GMT)

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்யப்படுவதில்லை என்று குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாதாந்திர விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.

கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசியதும், அதற்கு கலெக்டர் அளித்த பதில்களும் விவரம் வருமாறு:-

விவசாயி வீராசாமி:- பயிர்களுக்கான இழப்பீட்டு தொகை பெரும்பாலான விவசாயிகளுக்கும் இன்னும் கிடைக்கவில்லை. அதனை உடனே வழங்க வேண்டும்.

கலெக்டர்: பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்திற்கு ரூ.84.53 கோடி அரசிடம் இருந்து இழப்பீடாக பெறப்பட்டுள்ளது. 42 ஆயிரத்து 860 விவசாயிகளுக்கு இந்த தொகை இழப்பீடாக வழங்கப்பட உள்ளது. இழப்பீடு தொகை பெற காப்பீட்டு கட்டணம் செலுத்த கடைசி தேதி கடந்த பின்பும் பணம் கட்டிய விவசாயிகளுக்கு ரூ.18 கோடி கொடுக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த தொகை பெறப்பட்டு விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

விவசாயி நாகராஜ்:- கண்டமங்கலம் பகுதியில் மணல் கொள்ளை அதிகமாக நடந்து வருகிறது. இதனை உடனே தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலெக்டர்: மணல் கடத்துபவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து இதுவரை ரூ.2 கோடியே 8 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மணல் கொள்ளையை தடுக்க மேலும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

விவசாயி சுப்பிரமணியன்:- சே.புதூரில் உள்ள குவாரியில் அனுமதியின்றி கல் உடைப்பதால் அருகில் இருக்கும் குடியிருப்பு சுவர்களில் விரிசல் ஏற்படுகிறது.இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சே.புதூரில் உள்ள தரைப்பாலம் சேதமடைந்துள்ளது. அதை உடனே சீரமைக்க வேண்டும். கூட்டுறவு சங்க தேர்தலை முறையாகவும், ஜனநாயக ரீதியாகவும் நடத்த கலெக்டர் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

கலெக்டர்: உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

விவசாயி சின்னத்தம்பி:- பெரியாண்டிப்பட்டு ஏரியில் மதகு உடைந்து பல ஆண்டுகள் ஆகிறது. உடனே அதை சரிசெய்ய வேண்டும்.

கலெக்டர்: பொதுப்பணித்துறையினர் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயி கண்ணன்:- நெய்வனை கிராமத்தில் ஓடை புறம்போக்கு இடத்தை 3 ஏக்கர் அளவில் தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அந்த ஆக்கிரமிப்பை உடனே அகற்ற வேண்டும்.

கலெக்டர்: விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

விவசாயி முருகையன்:- கரும்பு விவசாயிகளை வஞ்சிக்கும் நோக்கில் அரியூர் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் செயல்படுகின்றனர். நிலுவைத்தொகையையும் வழங்காமல் பாக்கி வைத்துள்ளனர். உடனே அந்த நிலுவைத்தொகையை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

கலெக்டர்: ஆலை நிர்வாகத்தினரிடம் பேசி விரைவில் நிலுவைத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயி முருகன்:- ஒடுவன்குப்பம் ஏரியில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்குவதில்லை.

கலெக்டர்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயி குணசேகர ஆழ்வார்:- சங்கராபுரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்களுக்கு உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்யப்படுவதில்லை. இதுபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களிலும் விவசாயிகளுக்கு உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்யப்படுவதில்லை என்று மற்ற விவசாயிகளும் எழுந்து முறையிட்டனர்.

கலெக்டர்: விவசாயிகளுக்கு உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்யப்படும். இதை அந்தந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூட நிர்வாகத்தினர் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Next Story