நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் தீர்ப்பு விவரங்களை ஆய்வு செய்த பிறகுதான் முடிவு எடுக்க முடியும், சபாநாயகர் வைத்திலிங்கம் திட்டவட்டம்


நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் தீர்ப்பு விவரங்களை ஆய்வு செய்த பிறகுதான் முடிவு எடுக்க முடியும், சபாநாயகர் வைத்திலிங்கம் திட்டவட்டம்
x
தினத்தந்தி 23 March 2018 11:30 PM GMT (Updated: 23 March 2018 10:03 PM GMT)

நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் ஐகோர்ட்டு தீர்ப்பு விவரங்களை ஆய்வு செய்த பிறகுதான் எந்த முடிவும் எடுக்க முடியும் என்று சபாநாயகர் வைத்திலிங்கம் கூறினார்.

புதுச்சேரி,

புதுவை சட்டமன்றத்துக்கு மத்திய அரசால் நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்ட பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், விவேகானந்தா பள்ளி தாளாளர் செல்வகணபதி ஆகியோரின் நியமனம் செல்லும் என சென்னை ஐகோர்ட்டு நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பினை தொடர்ந்து வருகிற 26-ந்தேதி நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தில் தாங்களும் கலந்துகொள்வோம் என்று சாமிநாதன் எம்.எல்.ஏ. அறிவித்தார்.

இந்தநிலையில் நேற்று நியமன எம்.எல்.ஏ.க்களான சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் தலைமை செயலாளர் அஸ்வனிகுமாரை சந்தித்து பேசினார்கள். அவர்களுக்கு தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் இனிப்பு வழங்கினார்.

தொடர்ந்து அவர்கள் பிற்பகல் 1 மணிக்கு சட்ட சபைக்கு வந்தனர். நேராக சபாநாயகரின் அறைக்கு சென்ற அவர்கள் சபாநாயகர் வைத்திலிங்கத்தை சந்தித்து சால்வை அணிவித்தனர். பின்னர் சபாநாயகருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.

அவர்கள் சென்றதும் சபாநாயகர் வைத்திலிங்கத்தை நிருபர்கள் சந்தித்து பேட்டி கண்டனர். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு சபாநாயகர் வைத்திலிங்கம் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் கோர்ட்டு தீர்ப்பு அடிப்படையில் என்ன முடிவு எடுத்துள்ளர்கள்?

பதில்:- தீர்ப்பு தொடர்பாக எனக்கு இன்னும் அதிகாரப்பூர்வமான உத்தரவு எதுவும் கோர்ட்டில் இருந்து வரவில்லை. என்னை சந்தித்த சாமிநாதன், சங்கர், செல்வ கணபதி ஆகியோர் தீர்ப்பு விவரத்தை என்னிடம் தெரிவித்தனர். அதன் நகல் வந்ததும் என்னிடம் தருவதாக தெரிவித்தனர்.

இந்த விஷயத்தில் நானே எந்த முடிவும் எடுத்துவிட முடியாது. தீர்ப்பு விவரங்களை அரசு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து பரி சீலிக்க வேண்டும். அதன்பிறதான் எந்த முடிவும் எடுக்க முடியும். முழுமையான தீர்ப்பு விவரம் அரசு வக்கீலுக்கே இன்னும் கிடைக்கவில்லை.

கேள்வி:- ஐகோர்ட்டு தீர்ப்பினை அமல்படுத்தாவிட்டால் கடும் விளைவுகளை முதல்-அமைச்சரும், சபாநாயகரும் சந்திக்க நேரிடும் என்று சாமிநாதன் கூறியுள்ளாரே?

பதில்:- அது அவரது தனிப்பட்ட கருத்து. அதற்குள் செல்ல நான் விரும்பவில்லை. ஐகோர்ட்டு தீர்ப்பை வரவேற்றுள்ள கவர்னர் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளார். அதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இவ்வாறு சபாநாயகர் வைத்திலிங்கம் கூறினார். 

Next Story