குமரியில் ராம ராஜ்ய ரத யாத்திரை: பா.ஜனதா நிர்வாகி உள்பட 102 பேர் மீது வழக்கு


குமரியில் ராம ராஜ்ய ரத யாத்திரை: பா.ஜனதா நிர்வாகி உள்பட 102 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 25 March 2018 3:45 AM IST (Updated: 24 March 2018 11:16 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் ராம ராஜ்ய ரத யாத்திரையின் போது பொதுக்கூட்டம் மற்றும் ஊர்வலம் நடத்தியது தொடர்பாக பா.ஜனதா நிர்வாகி உள்பட 102 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நாகர்கோவில்,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி விசுவ இந்து பரி‌ஷத் ஆதரவு அமைப்பு சார்பில் உத்தர பிரதேசம் மாநிலத்தில் இருந்து கடந்த மாதம் (பிப்ரவரி) 13–ந் தேதி ராம ராஜ்ய ரத யாத்திரை புறப்பட்டது.

இந்த ரத யாத்திரை மத்திய பிரதேசம், மராட்டியம், கர்நாடகம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களை கடந்து தமிழகத்துக்கு வந்தது. ஆனால் ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு தமிழகத்தில் தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

போலீசார் நடவடிக்கை


இந்த நிலையில் ராம ராஜ்ய ரத யாத்திரை கடந்த 22–ந் தேதி ஆரல்வாய்மொழி வழியாக குமரி மாவட்டத்துக்கு வந்தது. இதையொட்டி நாகர்கோவிலில் ரத ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த பா.ஜனதா மற்றும் விசுவ இந்து பரி‌ஷத் சார்பில் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் சட்டம்–ஒழுங்கை கருத்தில் கொண்டு நாகர்கோவிலில் ரத ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

எனினும் போலீசாரின் தடையையும் மீறி நாகர்கோவிலில் ராம ராஜ்ய ரத ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. அதைத் தொடர்ந்து ரத யாத்திரை நேற்று முன்தினம் காலை நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு தக்கலை, களியக்காவிளை வழியாக கேரள மாநிலம் திருவனந்தபுரம் சென்றது. தடையை மீறி நாகர்கோவிலில் ரத ஊர்வலமும், பொதுக்கூட்டமும் நடந்தியதால் சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

102 பேர் மீது வழக்கு


அந்த வகையில் பா.ஜனதா நகர தலைவர் நாகராஜன் மீது கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் தக்கலையில் போலீசாரிடம் அனுமதி பெறாமல் ரத யாத்திரைக்கு முன் மோட்டார் சைக்கிளில் ஊர்வலம் சென்ற விசுவ இந்து பரி‌ஷத் அமைப்பின் மாவட்ட செயலாளர் வேலுபிள்ளை என்ற அஜி மற்றும் 100 பேர் மீது தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மொத்தம் 102 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

Next Story