நியூட்ரினோ திட்டத்தால் முல்லைப்பெரியாறு அணைக்கு ஆபத்து ஏற்படும் - தொல்.திருமாவளவன் பேச்சு


நியூட்ரினோ திட்டத்தால் முல்லைப்பெரியாறு அணைக்கு ஆபத்து ஏற்படும் - தொல்.திருமாவளவன் பேச்சு
x
தினத்தந்தி 24 March 2018 11:00 PM GMT (Updated: 24 March 2018 6:54 PM GMT)

நியூட்ரினோ திட்டத்தால் முல்லைப்பெரியாறு அணைக்கு ஆபத்து ஏற்படும் என்று தொல்.திருமாவளவன் பேசினார்.

உத்தமபாளையம்,

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொல்.திருமாவளவன் தலைமை தாங்கி பேசியதாவது:-

நியூட்ரினோ திட்டம் அமைப்பதற்கு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இத்திட்டத்தை வேறு மாநிலத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டனர். ஜெயலலிதா மறைந்த பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பச்சைக் கொடி காட்டியுள்ளது. இதனால் இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது.

இத்திட்டத்திற்காக தேவாரம் அருகே உள்ள பொட்டிப்புரம் அம்பரப்பர் மலைப்பகுதியில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. ஆய்வு மையத்திற்கு தேவைப்படும் தண்ணீரை முல்லைப்பெரியாற்றில் இருந்து கொண்டு செல்ல ராட்சத தொட்டியும் கட்டப்பட்டுள்ளது. நியூட்ரினோ ஆய்வு கருவி வைக்க சுமார் 2½ கிலோமீட்டர் தூரத்துக்கு கடின பாறைகளை உடைக்க வேண்டும். இதற்காக பல ஆயிரம் டன் வெடி மருந்துகளை வைத்து பாறைகளை தகர்க்கும் போது பூமியில் அதிர்வுகள் ஏற்படும்.

கடின பாறைகளை உடைக்கும் போது அம்பரப்பர் மலையின் அருகே உள்ள முல்லைப்பெரியாறு அணை உட்பட கேரள மாநில அணைகளுக்கும் ஆபத்து ஏற்படும். அதே நேரத்தில் வனப்பகுதியில் வன உயிரினங்கள் அழிந்து போகும். நாங்கள் ஆராய்ச்சிக்கு எதிரானவர்கள் இல்லை. அணுக்கதிர் உற்பத்தியை எதிர்க்கிறோம்.

இத்திட்டத்தால் சுற்றுச்சூழல் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்படும். ஆராய்ச்சிக்கு நல்ல பலன் கிடைத்தாலும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும்.

ஊட்டி அருகே முதுமலையில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த இடம் தேர்வு செய்தனர். அங்கு யானைகள் அதிக அளவில் இருக்கிறது. இதனால் வன உயிரினங்கள் பாதிக்கப்படும் என்ற காரணம் காட்டி பொட்டிப்புரத்தை தேர்வு செய்துள்ளனர். வன உயிரினங்களை காட்டிலும் மனித உயிர்கள் பெரிதாக தெரியவில்லை.

சமூகநீதி பாதுகாவலர் பெரியார் சிலையை உடைப்பேன் என்று கூறிய எச்.ராஜாவை கைது செய்யவில்லை.

இவ்வாறு பேசினார்.

முன்னதாக தொல்.திருமாவளவன் ஆண்டிப்பட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்தும், அவற்றை நிறைவேற்றாமல் மத்திய அரசு காலதாமதம் செய்கிறது. தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொண்டு வருகிறது. கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அந்த மாநில மக்களை பகைத்துக்கொள்ள மத்திய அரசு விரும்பவில்லை.

தமிழக அரசு மத்திய அரசுக்கு கூடுதல் அழுத்தம் கொடுத்தால் தான் அவர்களை பணிய வைக்க முடியும். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க அழுத்தம் தரும் வகையில் தமிழகத்தை சேர்ந்த எம்.பிக்கள் ஒட்டுமொத்தமாக தங்கள் பதவியை ராஜினாமா செய்தால், அது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்கும். அதன்மூலம் அந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story