தனியார் நிறுவன ஊழியரிடம் கத்திமுனையில் பணம், செல்போன் பறிப்பு


தனியார் நிறுவன ஊழியரிடம் கத்திமுனையில் பணம், செல்போன் பறிப்பு
x
தினத்தந்தி 24 March 2018 10:00 PM GMT (Updated: 24 March 2018 6:59 PM GMT)

தனியார் நிறுவன ஊழியரிடம் கத்திமுனையில் பணம், செல்போன் பறித்து சென்ற பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

செங்குன்றம்,

சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் பாபு (வயது 40). மாதவரத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு மாதவரம் மேம்பாலம் அருகே பஸ்சுக்காக காத்திருந்தார்.

அங்கு வந்த வாலிபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி பாபுவிடம் இருந்து ரூ.2,500 மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார்.

இதுபற்றி பாபு உடனடியாக அருகில் இருந்த போலீஸ் உதவி மையத்திற்கு தகவல் தெரிவித்தார். இந்த நிலையில் மாதவரம் போலீஸ் உதவி கமி‌ஷனர் ஜெயசுப்பிரமணியம் தலைமையில் போலீசார் மாத்தூர் மஞ்சம்பாக்கம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் மாதவரம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த சதீஷ் (எ) சதீஷ்குமார் (32) என்பதும், பிரபல ரவுடியான அவர் மாதவரத்தில் கடந்த 2010–ம் ஆண்டு நடைபெற்ற தி.மு.க. பிரமுகர் நாராயணமூர்த்தி என்பவரின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என்பதும் தெரியவந்தது.

மேலும் பாபுவிடம் இருந்து பணம், செல்போன் பறித்து சென்றதும் அவர்தான் என தெரியவந்தது. சதீஷ்குமார் மீது மாதவரம் பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் 5–க்கும் மேற்பட்ட வழிப்பறி வழக்குகள் உள்ளதும், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் போலி ஆவணம் தயாரித்து ரூ.5 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்த வழக்கில் அவர் முக்கிய குற்றவாளி என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மாதவரம் போலீசார் சதீஷ்குமாரை பல மாதங்களாக வழிப்பறி வழக்குகளில் தேடி வந்த நிலையில் தற்போது அவர் சிக்கி உள்ளார். சதீஷ்குமாரை கைது செய்த போலீசார் அவரை திருவொற்றியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.

Next Story