திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை கணக்கில் வராத 223 பவுன் நகைகள்- ரூ.1 லட்சம் சிக்கியது


திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை கணக்கில் வராத 223 பவுன் நகைகள்- ரூ.1 லட்சம் சிக்கியது
x
தினத்தந்தி 25 March 2018 4:45 AM IST (Updated: 25 March 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசு போக்குவரத்துத்துறையின் கூடுதல் ஆணையர் முருகானந்தத்தின் திருச்சி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத 223 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் சிக்கியது.

திருச்சி,

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா மலைக்கோவிலூரை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் சென்னை எழிலகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறையில் கூடுதல் ஆணையராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக திருச்சி மன்னார்புரம் நடுத்தெருவில் உள்ள சொந்த வீட்டில் வசித்து வருகின்றனர். முருகானந்தம் சென்னையில் தங்கியிருந்து பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் திருச்சியில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று காலை 8 மணியளவில் திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் 10 பேர் கொண்ட போலீசார் 2 ஜீப்பில் வந்தனர். பின்னர் அவர்கள் முருகானந்தம் வீட்டின் உள்ளே சென்று கதவுகளை உள்புறமாக தாழ்ப்பாள் போட்டனர். இதனை கண்ட முருகானந்தத்தின் மனைவி, 2 மகன்கள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். போலீசார் அவர்களை வெளியே விடவில்லை.

அவர்களிடம் நாங்கள் லஞ்ச ஒழிப்பு பிரிவில் இருந்து வந்திருக்கும் போலீசார். உங்களது வீட்டில் சோதனை செய்ய உள்ளோம் என்றனர். இதனை தொடர்ந்து போலீசார் வீட்டில் உள்ள ஒவ்வொரு அறைக்கும் சென்று அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அறைகளில் உள்ள பீரோக்கள் உள்ளிட்டவையில் இருந்த முக்கிய ஆவணங்கள், வீட்டுமனை பத்திரங்கள், முருகானந்தம் வங்கி பரிவர்த்தனை செய்ததற்கான ஆவணங்கள் ஆகியவற்றை கைப்பற்றிய போலீசார், அதனை பார்வையிட்டு முருகானந்தம் குடும்பத்தினரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.

முருகானந்தம் வீட்டில் காலை 8 மணிக்கு தொடங்கிய சோதனை தொடர்ந்து 11 மணி நேரம் நடந்தது. சோதனையை முடித்து கொண்டு லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் நேற்று இரவு 7 மணிக்கு வீட்டை விட்டு வெளியே வந்தனர். அப்போது அவர்களது கையில் ஏராளமான முக்கிய ஆவணங்கள் இருந்தன.

இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கூறியதாவது:-

முருகானந்தம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு பல்வேறு புகார்கள் சென்றன. இதுதொடர்பாக முருகானந்தம் மீது நேற்று முன்தினம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் சென்னை போலீசார் கொடுத்த தகவலின் பேரில் திருச்சியில் உள்ள அவரது வீட்டில் நாங்கள் சோதனை மேற்கொண்டோம்.

இதேபோல் நேற்று ஒரே நாளில் கரூர் அரவக்குறிச்சியில் உள்ள அவரது வீட்டிலும், கோவையில் உள்ள வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அங்கேயும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சோதனை மேற்கொண்ட போலீசார் தெரிவித்துள்ளனர். திருச்சியில் உள்ள அவரது வீட்டில் இருந்து கணக்கில் வராத 223 பவுன் தங்க நகைகள், 1¼ கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.1 லட்சம் ரொக்கம், முக்கிய ஆவணங்கள், வீட்டுமனை பத்திரங்கள், வங்கி பரிவர்த்தனை செய்ததற்கான ஆவணங்கள் ஆகியவை சிக்கி உள்ளன. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்த உள்ளோம். மேலும் முருகானந்தத்திடம் இதுகுறித்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு போலீசார் கூறினர்.

முருகானந்தம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story