பெருந்துறை அருகே உள்ள சரளையில் ஈரோடு மண்டல தி.மு.க. மாநாடு கோலாகலமாக தொடங்கியது
பெருந்துறை அருகே உள்ள சரளையில் ஈரோடு மண்டல தி.மு.க. மாநாடு கோலாகலமாக தொடங்கியது. இதில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்.
ஈரோடு,
ஈரோடு மண்டல தி.மு.க. மாநாடு பெருந்துறையை அடுத்த சரளை அருகே அண்ணா நகர் பெரியார் திடலில் 2 நாட்கள் நடக்கிறது. சமூக நீதி மற்றும் மதநல்லிணக்க மாநாடாக நடைபெறும் இந்த மாநாட்டு தொடக்கவிழா நேற்று காலை நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று காலை 9 மணிக்கு மங்கள இசையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. காலை 10 மணிக்கு தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் ஆகியோர் மாநாட்டு திடலுக்கு வந்தனர்.
அப்போது கூடியிருந்த தொண்டர்கள் அவர் மீது பூக்கள் தூவி உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து மாநாட்டு கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் ஆகியோர் முன்னிலையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ. தி.மு.க. கொடியை ஏற்றி வைத்தார். அப்போது கூடி இருந்த தி.மு.க. தொண்டர்கள் வாழ்த்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
தொடர்ந்து மாநாட்டு நிகழ்ச்சிகள் கோலாகலமாக தொடங்கியது. மாநாட்டுக்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமை தாங்கினார். மாநாட்டு வரவேற்புக்குழு தலைவரும், ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான சு.முத்துசாமி வரவேற்றார்.
அவரை தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள் என்.நல்லசிவம், பா.மு.முபாரக், எஸ்.ஆர்.சிவலிங்கம், வீரபாண்டி ஆ.ராஜா, ராஜேந்திரன், க.செல்வராஜ், இல.பத்மநாபன், சி.ஆர்.ராமச்சந்திரன், தமிழ்மணி, மு.முத்துசாமி, நா.கார்த்திக், நன்னியூர் ராஜேந்திரன், கே.எஸ்.மூர்த்தி, பார்.இளங்கோவன் ஆகியோர் மாநாட்டு தலைவரை வழிமொழிந்து பேசினார்கள்.
இதைத்தொடர்ந்து மாநாட்டை தொடங்கி வைத்து திருச்சி சிவா எம்.பி. பேசினார். பின்னர் முன்னாள் மத்திய மந்திரியும், மாநாட்டு தலைவருமான சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமை தாங்கி பேசினார்.
மாநாட்டில் கலைஞரின் எழுத்தும் பேச்சும் என்ற தலைப்பில் வாகை சந்திரசேகர் எம்.எல்.ஏ., கிளம்பிற்று காண் தமிழ்ச்சிங்க கூட்டம் என்ற தலைப்பில் குடியாத்தம் குமரன், ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம் என்ற தலைப்பில் தமிழ்தாசன், உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற தலைப்பில் பொன்.முத்துராமலிங்கம் ஆகியோர் பேசினார்கள்.
நண்பகல் 2 மணியுடன் முதல் நாள் பகல் நேர நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன.
முன்னதாக நேற்றுக்காலையில் இருந்தே தமிழ் கிராமிய கலை நிகழ்ச்சிகள் மூலம் தொண்டர்கள் வரவேற்கப்பட்டனர். இதுபோல் மேடையில் தவில் மற்றும் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது.
மாநாட்டில் முதன்மை செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, வி.பி.துரைசாமி, துர்க்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி., முன்னாள் மத்திய மந்திரிகள் தயாநிதி மாறன், ஆ.ராசா, ஜெகத்ரட்சகன், கட்சியின் மாநில நிர்வாகிகள் பொங்கலூர் பழனிசாமி, எ.வ.வேலு, பொன்முடி, மு.பெ.சாமிநாதன், வி.சி.சந்திரகுமார், என்.கே.கே.பெரியசாமி, எஸ்.எல்.டி.ப.சச்சிதானந்தன், என்.கே.கே.பி.ராஜா, டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., அனிதாராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தி.மு.க. தொண்டர்கள் பல்லாயிரக்கணக்கானோர் கார், வேன் மற்றும் வாகனங்களில் வந்து குவிந்தனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு 2-ம் நாள் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. கட்சி நிர்வாகிகள் பல்வேறு தலைப்புகளில் பேசுகிறார்கள். பகல் 12.30 மணிக்கு திண்டுக்கல் ஐ.லியோனி பேசுகிறார். மாலை 4 மணிக்கு மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இரவு 8 மணிக்கு தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் பேசுகிறார். அவரைத்தொடர்ந்து செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மாநாட்டில் நிறைவுரையாற்றுகிறார்.
நாளை (திங்கட்கிழமை) மாநாட்டு மேடையில் வைத்து 110 ஜோடிகளுக்கு செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைக்கிறார்.
Related Tags :
Next Story