காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது டி.டி.வி.தினகரன் பேட்டி


காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது டி.டி.வி.தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 25 March 2018 4:30 AM IST (Updated: 25 March 2018 2:13 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது என்று தஞ்சையில் டி.டி.வி.தினகரன் கூறினார்.

தஞ்சாவூர்,

அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எடப்பாடி தலைமையிலான அரசின் ஒரு ஆண்டு சாதனை விழா கொண்டாடி உள்ளனர். அது சாதனை விழா அல்ல, சோதனை விழா. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க் கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள்தான் இந்த ஆட்சியின் மூலம் பயன் அடைகிறார்கள். பொதுமக்கள், ஏழை, எளிய மக்கள் பயன் அடைவது கிடையாது.

இந்த ஆட்சி கவிழ வேண்டும் என்று கூறிவிட்டு 5 மாதங்களுக்கு முன்பு சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் அரசின் சாதனை பற்றி பேசுகிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி தான் பொற்கால ஆட்சி. இப்போது நடை பெறும் ஆட்சி மக்கள் விரோத ஆட்சி. இந்த ஆட்சி முடிவுக்கு வர வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பம்.

கர்நாடக தேர்தல் நடைபெறும் வரை காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கப்போவது இல்லை. காலம் தாழ்த்தும் நடவடிக்கையை மத்திய அரசு செய்து வருகிறது. உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு கடந்த மாதம் வந்தபோது அது பற்றி குழப்பமாக கர்நாடகம் கருத்து தெரிவித்தது. மத்திய அரசு வக்கீலும் கூறினார். உடனே தமிழக அரசு உச்சநீதிமன்றத்துக்கு சென்று விளக்கம் கேட்டு இருக்க வேண்டும். மறுஆய்வு மனு தாக்கல் செய்து இருக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை.காவிரி நீரை தேக்கி வைக்கவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழை பெய்யாததாலும், காவிரி நீர் வராததாலும் பயிர்கள் கருகி விட்டன. உரிய தண்ணீரை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுங்கள் என்று நான் ஜனவரி மாதத்தில் இருந்து கூறி வருகிறேன். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாங்கள் நடத்தும் உண்ணாவிரதப்போராட்டத்தில் விவசாய சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொள்கிறார்கள். உண்ணாவிரதத்துக்கு பின்னர் அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும்.

அ.தி.மு.க. அம்மா அணி இருந்தபோது அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்கள் எங்களிடம் தான் இருந்தனர். தற்போது தொண்டர்கள் 95 சதவீதம் பேர் எங்களிடம் தான் உள்ளனர். எனவே அவர்கள் தான் எங்களிடம் வந்து இணைய வேண்டும். உண்மையான கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் எங்களிடம் தான் உள்ளனர். கட்சியை காப்பாற்ற வேண்டும் என்பவர்கள் சசிகலா தலைமையில் செயல்பட்டு வருகிறார்கள்.50 ஆண்டு திராவிட ஆட்சியில் தான் தமிழகம் வளர்ச்சி அடைந்தது. இந்தியாவிலேயே தமிழகம் சிறந்த மாநிலமாக உயர்ந்தது. திராவிட ஆட்சியில் தான் தனிமனித வருமானம் அதிகரித்தது. அதனால் தான் மத்திய அரசு நிதியை குறைத்துள்ளது. கர்நாடகாவுக்கு 40 சதவீதம் தான் குறைத்துள்ளது. ஆனால் தமிழகத்திற்கு அதிக அளவு நிதியை குறைத்துள்ளது. திராவிட ஆட்சிகளில் முன்னேற்றம் இருப்பதால் தான் நிதியை குறைத்துள்ளனர். திராவிட ஆட்சியில் தான் தமிழகம் முன்னேறி உள்ளது.

ஒரு ஆண்டு சாதனை விழாவை அனைத்துக்கட்சிகளும் எதிர்த்த நிலையில் பா.ஜ.க. தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஏனென்றால் பா.ஜ.க.வின் ஏஜென்சி தான் இங்கு ஆட்சியில் உள்ளது. எனவே அவர்கள் ஆதரவு தான் தெரிவிப்பார்கள். ஓ.பன்னீர்செல்வம் கூட இதை ஒத்துக்கொண்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story