வேலூரில் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் ஊர்வலம்


வேலூரில் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் ஊர்வலம்
x
தினத்தந்தி 25 March 2018 4:16 AM IST (Updated: 25 March 2018 4:15 AM IST)
t-max-icont-min-icon

வேலூரில், 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஊர்வலம் நடந்தது.

வேலூர்,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பூதியம் பெறும் வருவாய் கிராம உதவியாளர், சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி செயலாளர், ஆசிரியர்கள் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், மாநில அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டோ-ஜியோ) வலியுறுத்தி வருகிறது.

மேலும் இக்கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பல்வேறு கட்டங்களாக ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தப்பட்டன. ஆனால் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை.

அதைத்தொடர்ந்து வருகிற மே மாதம் 8-ந் தேதி சென்னை கோட்டையை முற்றுகையிட்டு போராடுவது என்றும், அதற்கு முன்பாக மாவட்ட தலைநகரங்களில் கோட்டை முற்றுகைக்கான ஆயத்த ஊர்வலம் நடத்துவது என ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி வேலூரில் சென்னை கோட்டை முற்றுகைக்கான ஆயத்த ஊர்வலம் நேற்று நடந்தது. சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் அருகே இருந்து ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தை அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார். ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் தாண்டவராயன், சரவணராஜ், அமர்நாத் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநிலத்தலைவர் சேகர், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி, கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர். ஊர்வலம் கலெக்டர் அலுவலகம் அருகே நிறைவடைந்தது. தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டமும் நடந்தது. இதில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த ராஜேஷ்கண்ணா நன்றி கூறினார்.

அதைத்தொடர்ந்து ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் தாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பல்வேறு போராட்டங்களை ஜாக்டோ-ஜியோ நடத்தியது. ஆனால் அரசு இதுவரை கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. சென்னை கோட்டை முற்றுகைக்கான ஆயத்த ஊர்வலத்துக்கு பல மாவட்டங்களில் அனுமதி அளிக்கப்படவில்லை. இது கண்டிக்கத்தக்கது.

4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற மே மாதம் 8-ந் தேதி சென்னை கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக தமிழக அரசு எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story