தமிழ்நாடு முழுவதும் 70 லட்சம் மரக்கன்றுகள் நடப்படுகின்றன அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தகவல்


தமிழ்நாடு முழுவதும் 70 லட்சம் மரக்கன்றுகள் நடப்படுகின்றன அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தகவல்
x
தினத்தந்தி 25 March 2018 5:00 AM IST (Updated: 25 March 2018 4:52 AM IST)
t-max-icont-min-icon

உலக வன நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 70 லட்சம் மரக்கன்றுகள் நடப்படுகின்றன என்று அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கூறினார்.

ஆரணி,

ஆரணி அருகே வெட்டியாந்தொழுவம் கிராமத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் வனத்துறை சார்பில் உலக வன நாள் விழா மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். தலைமை வன பாதுகாவலர் தின்கர்குமார், மாவட்ட வன அலுவலர் அர்ச்சனாகல்யாணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வனச்சரகர் ரமேஷ் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

உலக வன நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 70 லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் 24 ஆயிரத்து 138 மரக்கன்றுகள் பள்ளி வளாகங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், சாலையோரங்கள், வனப்பகுதிகளில் நட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன் முதல்கட்டமாக இன்று (நேற்று) மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது என அவர் பேசினார்.

விழாவில் வனச்சரகர்கள் சக்திகணேசன், குமார், தூசி கே.மோகன் எம்.எல்.ஏ., ஒன்றியக்குழு முன்னாள் தலைவர்கள் வக்கீல் கே.சங்கர், கோவிந்தராசன், ஜெயலலிதா பேரவை நிர்வாகி பாரி பி.பாபு, பாசறைநிர்வாகி பி.ஜி.பாபு, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் கஜேந்திரன், ஒன்றிய செயலாளர் பி.ஆர்.ஜி.சேகர், ஒன்றிய அவைத்தலைவர் நரசிம்மன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சேவூர் ஜெ.சம்பத், மாநில டான்சி நிர்வாகி ஏ.கே.குமரவேல் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து ஆரணி பழைய பஸ்நிலைய வளாகத்தில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி திறப்பு விழா நடந்தது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். நகராட்சி மண்டல நிர்வாக பொறியாளர் காதர்மொய்தீன், தாசில்தார் ஆ.சுப்பிரமணி, நகராட்சி ஆணையாளர் டி.நெடுமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி பொறியாளர் கணேசன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு ஓராண்டு சாதனைகள் குறித்த புத்தகங்களை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து அரசு, தனியார் பஸ்களின் முகப்பு கண்ணாடிகளில் அரசின் சாதனை குறித்த ஸ்டிக்கர்களை ஒட்டினார்.

நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர்கள், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள், முன்னாள் நகரசபை உறுப்பினர்கள், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story