தானேயை தொடர்ந்து கல்யாண், டோம்பிவிலியிலும் குடிநீர் வெட்டு


தானேயை தொடர்ந்து கல்யாண், டோம்பிவிலியிலும் குடிநீர் வெட்டு
x
தினத்தந்தி 25 March 2018 4:59 AM IST (Updated: 25 March 2018 4:59 AM IST)
t-max-icont-min-icon

தானேயை தொடர்ந்து கல்யாண், டோம்பிவிலியிலும் குடிநீர் வெட்டை மாநகராட்சி அறிவித்து உள்ளது.

அம்பர்நாத்,

வெயில் காலம் தொடங்கும் முன்பே தானேயின் பல பகுதிகளில் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தானேயை சுற்றி உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு போதிய அளவு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. தற்போது உல்லாஸ் நதியில் குறைந்தளவு தண்ணீர் இருப்பே உள்ளது. இதையடுத்து ஏற்கனவே தானே மாநகராட்சி 20 சதவீத குடிநீர்வெட்டை அறிவித்து உள்ளது.

இந்தநிலையில் தானே நீர்வளத்துறையின் அறிவுறுத்தலின்படி கல்யாண் - டோம்பிவிலி மாநகராட்சியும் குடிநீர் வெட்டுஅறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

இதன்படி கல்யாண், டோம்பிவிலியில் மாநகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு வாரந்தோறும் திங்கட்கிழமை மதியம் முதல் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வரை இனிமேல் குடிநீர் வினியோகம் இருக்காது. இதேபோல கல்யாண் - டோம்பிவிலிமாநகராட்சிக்கு உட்பட்ட 27 கிராம பகுதிகளுக்கு மாநில தொழில்துறை மேம்பாட்டு கழகம் (எம்.ஐ.டி.சி.) சார்பில் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த கிராம பகுதிகளுக்கு வாரந்தோறும் புதன் நள்ளிரவு 12 மணி முதல் வியாழன் நள்ளிரவு 12 மணி வரை (24 மணிநேரம்) குடிநீர் வினியோகம் செய்யப்படாது.

குடிநீர் வெட்டு குறித்து அஜாடே கிராமத்தை சேர்ந்த ராஜூ என்பவர் கூறும்போது, “ உடைந்த குழாய்களில் இருந்து அதிகளவு தண்ணீர் வீணாகிறது.

பலர் குடிநீர் குழாய்களை உடைத்து தண்ணீரை திருடி வருகின்றனர். இதை தடுத்து நிறுத்தாமல் மாநகராட்சி குடிநீர் வெட்டை அமல்படுத்துகிறது” என்றார். 

Next Story